Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 கணிதம் கேள்விகள் எளிமை

நேற்று நடந்த பிளஸ் 2 கணிதம் பாடத்திற்கான தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், அதிகம் பேர் 200 க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்புகள் உள்ளதாகவும் மாணவர்கள், ஆசிரியர் கருத்து தெரிவித்தனர்.

எம்.கே.செல்வமீனா, தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி: ஒரு மதிப்பெண், ஆறு மதிப்பெண் கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்தன. 10 மதிப்பெண் பகுதியில் மூன்று கேள்விகள் மட்டும் புதிதாக இருந்தன. அனைத்தும் எதிர்பார்த்த கேள்விகளாக அமைந்திருந்தன. நேர நிர்வாகத்தை முறைப்படுத்தி சரியாக கேள்விகளுக்கு பதிலளித்திருந்தால் 200 மதிப்பெண்கள் பெறுவது மிக எளிமையான விஷயம்.

ப.சுதன் ராஜ், தேனி கம்மவார் சங்க மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: ஒரு மதிப்பெண் பகுதிக்கு புத்தகத்தின் பின்பக்க பகுதியில் இருந்தே கேள்விகள் அதிகம் வந்திருந்தன. ஆறு மதிப்பெண்களிலும் எதிர்பார்த்த கேள்விகளே இருந்தன. பயிற்சி எடுத்த மாணவர்களுக்கு 10 மதிப்பெண் கேள்விகளும் எளிமையாகவே இருந்தன. எனவே கணக்கு தேர்வு கடினமில்லாமல் எளிமையாக இருந்தது என்று தான் சொல்லவேண்டும். அதிக மாணவர்கள் 'சென்டம்' பெற வாய்ப்புள்ளது.

எம்.ஷெர்லி, மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: தேர்வு இவ்வளவு எளிமையாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. பலமுறை யூனிட் தேர்வு, முழுத்தேர்வு எழுதி பழகியதால் இரண்டரை மணி நேரத்தில் கணக்கு தேர்வினை முடித்து விட்டு பலமுறை திரும்பவும் சரிபார்த்து விட்டேன். நான் 200 மதிப்பெண் பெறுவது உறுதி. இதுபோல் பலரும் பெற வாய்ப்பு உள்ளது.

எஸ்.ரவிச்சந்திரன், ஆசிரியர், நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி: 'புளூபிரிண்ட்'படி கேள்விகள் கேட்கப்பட்டது. கணக்கு தேர்வு எளிமையாக இருந்ததால், அதிக மாணவர்கள் வெற்றி பெறுவது உறுதி. சராசரியாக படிக்கும் மாணவர்கள் கூட அதிக மதிப்பெண் பெறுவர். நிறைய பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி காண்பிக்க முடியும். 10 மதிப்பெண் கேள்வியில் இரண்டு தேற்றங்கள் கேட்கப்பட்டிருந்ததால், நன்றாக படித்த மாணவர்களுக்கு பிரச்னை இல்லை. சராசரி மாணவர்களுக்கு சற்று திணறல் இருக்கலாம். இவ்வாறு கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement