Ad Code

Responsive Advertisement

அடைவுத் திறன் தேர்வில் ஆள் மாறாட்டம்: தலைமை ஆசிரியர் உள்பட மூவர் பணியிடை நீக்கம்

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான அடைவுத் திறன் மதிப்பீடுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாகத் தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் கற்றல் திறனை அதிகரிக்கும் பொருட்டு 3, 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவுத் திறன் மதிப்பீடுத் தேர்வு நடத்தப்படுகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் சேலத்தில் உள்ள 21 ஒன்றியங்களைச் சேர்ந்த 420 பள்ளிகளில் மாநில அளவிலான அடைவுத் திறன் மதிப்பீடுத் தேர்வு ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது.

இதில், சேலத்தாம்பட்டியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்புத் தேர்வை 7, 8-ஆம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு எழுத வைத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி அனைவருக்கும் கல்வி இயக்கக மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டார். இதையடுத்து, சேலம் அனைவருக்கும் கல்வி இயக்ககக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, சேலத்தாம்பட்டி நடுநிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.

இதில் 5-ஆம் வகுப்புத் தேர்வை 7, 8-ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதியது தெரியவந்தது. மேலும், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே, மாணவர்களை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, சென்னையில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநிலத் திட்ட இயக்குநருக்கு ஆய்வறிக்கை அனுப்பினார். இதையடுத்து, தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, மாநிலத் தொடக்கக் கல்வி இயக்குநர் இளங்கோவனுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, சேலத்தாம்பட்டி பள்ளியைச் சேர்ந்த பட்டதாரி தலைமை ஆசிரியர் ரவிராஜ் முருகன், இடைநிலை ஆசிரியர்கள் சுரேஷ்பாபு, உமா மகேஸ்வரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயகுமார் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement