Ad Code

Responsive Advertisement

விலை உயர்ந்த நகைகளை அணிந்து மாணவ - மாணவிகள் பள்ளிக்கு வரக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

மாணவ, மாணவிகள் விலை உயர்ந்த நகைகளை அணிந்து பள்ளிக்கு வரக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

திண்டிவனம் அருகே பத்தாம் வகுப்பு மாணவி, காதணிக்காக சக மாணவியை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளார்.

அதன் விவரம்:

மாணவ, மாணவிகள் வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும்போதும், பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போதும் பாதுகாப்பாக சென்று திரும்புவதற்கு மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்புக்காக கீழ்க்கண்ட வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் விலை உயர்ந்த நகைகளை அணிந்து வரக் கூடாது. அதேபோல், செல்லிடப்பேசி போன்ற உபகரணங்களை எடுத்து வரக் கூடாது.

வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும் போது தனியாக வருவதைத் தவிர்த்து, பிற மாணவ, மாணவிகளுடன் குழுவாக இணைந்து வர வேண்டும்.

பள்ளிக்கு வரும் வழியில் நீர்நிலைகள் ஏதேனும் இருப்பின் அதன் அருகில் செல்லக் கூடாது.

ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் இருப்பின் கவனமாக எச்சரிக்கையுடன் அதனைக் கடக்க வேண்டும்.

ரயில், பேருந்தில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யக் கூடாது.

பள்ளிக்கு வரும் வழியில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசவோ, அவர்கள் தரும் உணவுப் பொருள்களை வாங்கவோ கூடாது.

ஒரே பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் அல்லது பிற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் வாக்குவாதம், சண்டை சச்சரவுகள், கிண்டல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

பள்ளி நேரம் முடிந்த பின்னர், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் நண்பர்கள் வீடு, திரையரங்குகள் போன்ற வெளியிடங்களுக்குச் செல்லக் கூடாது.

பள்ளி இறைவணக்கக் கூட்டத்தின்போது தலைமையாசிரியர்களின் மூலம் மாணவர்களுக்கு இதுகுறித்த அறிவுரைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement