Ad Code

Responsive Advertisement

அதிகமாக பணம் வசூலித்த பள்ளிகளுக்கு நெருக்கடி

அரசு நிர்ணயித்ததை விட, மாணவர்களிடம் அதிகமாக வசூலித்த, 7 கோடி ரூபாயை தனியார் பள்ளிகளிடமிருந்து பறிமுதல் செய்ய, தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி உத்தரவிட்டு உள்ளது.
சிங்காரவேலர் கமிட்டி:

தனியார் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்புகள், வசதிகளை பொறுத்து கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, நீதிபதி சிங்காரவேலர் கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. கமிட்டி தலைவரான, நீதிபதி சிங்காரவேலர், கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக, தனியார் பள்ளிகளின் கட்டண வசூல் குறித்து, விசாரணை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதிலுமிருந்து கட்டணப் பிரச்னை தொடர்பாக வந்த, 52 புகார்களை, அவர் விசாரித்ததில், 25க்கும் மேற்பட்ட பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தது உறுதி செய்யப்பட்டது. எனவே, அதிக கட்டணம் வசூலித்த, 12 பள்ளிகளிடமிருந்து, 46.19 லட்சம் ரூபாயை, சிங்காரவேலர் கமிட்டி திரும்பப் பெற்று பெற்றோரிடம் ஒப்படைத்து உள்ளது. மேலும், 25 பள்ளிகளிடம் இருந்து, அதிக மாக வசூலித்த, 7.16 கோடி ரூபாய் கட்டணத்தை பள்ளி நிர்வாகத்திடமிருந்து, திரும்பப் பெறுமாறு பள்ளிக்கல்வித் துறைக்கு சிங்கார வேலர் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. ஆனால், பணத்தை எப்படி பெறுவது என்று, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கையைப் பிசைந்து வருகின்றனர்.

'நோட்டீஸ்':

இதற்கிடையில், கட்டணம் நிர்ணயிக்க முன் வராத, 520 தனியார் பள்ளிகளுக்கு காலக்கெடு விதித்து, சிங்காரவேலர் கமிட்டி நோட்டீஸ் அனுப்பியது. இதில், 262 பள்ளிகள் கட்டணம் நிர்ணயிக்க முன்வந்து உள்ளன.

இதுகுறித்து, நீதிபதி சிங்காரவேலர் கூறியதாவது:

இதுவரை, 11 ஆயிரம் பள்ளிகளுக்கு மூன்றாண்டுகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணம் நிர்ணயிக்க முன்வராத, 520 பள்ளிகளில், 262 பள்ளிகளின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதேபோல், 11 ஆயிரம் தனியார் பள்ளிகளில், 430 பள்ளிகள் மேல்முறையீடு செய்தன. இதை விசாரித்துக் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற பரிந்துரைகளில், 100 பள்ளிகளின் மேல்முறையீடுகள் விசாரிக்கப்பட்டுள்ளன. அதிக கட்டணம் தொடர்பாக, 55 புகார்கள் வந்தன.

விசாரணை:

இதன்மீது விசாரணை நடத்தி, பள்ளிகள் வசூலித்த அதிக கட்டணத்தை, பள்ளி நிர்வாகத்திடமிருந்து திரும்பப்பெற உத்தரவிடப்பட்டுள்ளது. பெற்றோர், சங்கங்கள் மற்றும் பள்ளிகள் தரப்பில் வரும் புகார்கள் தாமதமின்றி விசாரிக்கப்படுகின்றன. பெற்றோர் தைரியமாக புகார்கள் தரலாம். அதை உரிய விதிகளின் படி விசாரணை நடத்துவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement