Ad Code

Responsive Advertisement

வினா, விடைத்தாள்களை பத்திரமாக அனுப்புவது எப்படி? பிளஸ் 2 தேர்வு குறித்து செயலர் மற்றும் இயக்குனர் ஆலோசனை

தமிழகத்தில், மார்ச் 5ம் தேதி, பிளஸ் 2; மார்ச் 19ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள்கள் மற்றும் முகப்புப் பக்கம் இணைப்புப் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, பிளஸ் 2 தேர்வை நடத்தும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வரும், 22ம் தேதி, மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் முடிகின்றன. விடைத்தாள் மற்றும் வினாத்தாள்களை, தேர்வு மையங்களுக்கு அனுப்பும் ஏற்பாடு நடந்து வருகிறது.

இதுகுறித்து, துறை அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மற்றும் தேர்வுத் துறை இயக்குனர், நேற்று, தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். துறைச் செயலர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகளை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் சபீதா ஆலோசனை நடத்தினார். இதேபோல், தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன், தேர்வுத் துறை இணை இயக்குனர்கள், பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், டி.பி.ஐ., வளாகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:

செய்முறைத் தேர்வுகள் முடிந்ததும், அதன் விடைத்தாள்களை ஆய்வு செய்வது; ரெக்கார்டு நோட்டுகளை சோதித்தல்; தேர்வு மையங்களை அதிகாரிகள் பார்வையிட்டு, உரிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது; வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை பத்திரமாக தேர்வு மையங்களுக்கு அனுப்பி, அதை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர். பிளஸ் 2 தேர்வு எழுதுவோரின் பட்டியல், தேர்வு மையங்கள், எத்தனை தேர்வு அறைகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படையின் எண்ணிக்கை ஆகிய விவரங்கள், தேர்வுத் துறையால் நேற்று இறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement