Ad Code

Responsive Advertisement

1,008 தமிழ் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை செய்தனர்

சென்னையில் நடந்து வரும் இந்து ஆன்மிக கண்காட்சியின் 3-வது நாளான நேற்று 1,008 தமிழாசிரியர்கள்- ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை செய்தனர்.

1,008 தமிழ் ஆசிரியர்களுக்கு பாதபூஜை

சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் நடந்து வரும் இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் ஒரு பகுதியாக நேற்று, ‘மாத்ரு - பித்ரு வந்தனம் - ஆச்சார்ய வந்தனம்’ என்று தலைப்பில் இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள 6 நல்ல பண்புகளில் ஒன்றான ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களை வணங்குதலை, இளைய தலைமுறையினர் முழுமையாக கடைப்பிடிக்கும் வகையில் 1,008 தமிழாசிரியர்கள்- ஆசிரியர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக ஆசிரியர்களுக்கு வேட்டி, நீல நிற சட்டை, தோளில் போடும் துண்டு மற்றும் ஆசிரியைகளுக்கு நீல நிறத்தில் புடவையும் வழங்கப்பட்டிருந்தது. இதனை அனைவரும் ஒரே மாதிரியாக அணிந்து விழா பந்தலில் அமரவைக்கப்பட்டு இருந்தனர்.

இவர்களுக்கு அமிர்தா, பத்மா ஷேசாத்திரி மற்றும் ராஜலட்சுமி பள்ளிகளை சேர்ந்த 1,008 மாணவ, மாணவிகள் பாதபூஜை செய்து வழிப்பட்டனர்.

குருவை பற்றிக் கொண்டால்...

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தருமபுர ஆதினம் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் ஆசி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

பாரம்பரியமாகவே குருவை வணங்குவது நம்முடைய சமயத்திலேயே உள்ளது. மாணவர்களுக்கு இருளை நீக்கி அறிவை வழங்குவதும், குற்றங்களை நீக்கும் உயரிய பணியை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். குருபதத்தை மாணவர்கள் பற்றிக் கொண்டால் வாழ்க்கையில் மேல்நிலையை அடைய முடியும். ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் அவர்களால் சுதந்திரமாக பாடம் கற்றுதரமுடிவதில்லை. எனவே ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் தேவையற்றது. சுதந்திரமாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிரியர்கள் ஆனந்த கண்ணீர்

பாதபூஜை செய்யப்பட்ட அம்பத்தூர் விவேகானந்தா பள்ளி ஆசிரியைகள் பிரகதாம்பாள், சசிகலா ஆகியோர் கூறும் போது, ‘‘ஆசிரியர் பணியே அறப்பணித்தான், அதில் எங்களை அர்ப்பணித்துள்ளோம். சமுதாயத்தை மேம்படுத்தும் பொறுப்புள்ள பணியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு, இதுபோன்று பாதபூஜை செய்த குழந்தைகளை எங்கள் குழந்தைகளாக பாவித்து உச்சிமுகர்ந்து ஆசி வழங்கியதால் ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது’’ என்றார்.

ஆசிரியைக்கு பாதபூஜை செய்த அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவி காவியா கூறும் போது, ‘‘எழுத்தறிவித்தவன் இறைவன்’’ என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க எங்களுக்கு எழுத்தறிவித்த ஆசிரியர்களை இறைவனாகவே பாவித்து பயபக்தியுடன் பாதபூஜை செய்து, அவர்களின் விலைமதிப்பு மிக்க ஆசியை பெற்றுக்கொண்டது, வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்’’ என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement