Ad Code

Responsive Advertisement

தேர்வு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு: மூன்றாம் பருவ புத்தகங்களை விநியோகிக்க ஏற்பாடு

அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை (ஜன.2) திறக்கப்படுகின்றன. இதையடுத்து, மூன்றாம் பருவத்துக்கான விலையில்லா புத்தகங்களை மாணவர்களுக்கு அன்றைய தினமே விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முப்பருவ முறையின் கீழ், ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவமாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவமாகவும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாவது பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை, தொடர் மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன. மூன்றாம் பருவத்துக்கான சுமார் 2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

இன்று முதல் விநியோகம்: தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் அந்தந்த வட்டார விற்பனைக் கிடங்குகளில் இருந்து கடந்த 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டன. அரசுப் பள்ளிகளுக்கான புத்தகங்கள், அரையாண்டுத் தேர்வு விடுமுறையின் போதே மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டன.

இதனால், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்களை விநியோகம் செய்வதற்காக ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளளன. கடந்த 23-ஆம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்த விடுமுறைக்குப் பிறகு, தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் வெள்ளிக்கிழமை (ஜன.2) திறக்கப்படுகின்றன.

முப்பருவ முறைக் கல்வியில், மூன்றாம் பருவம் தொடங்கியுள்ள (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) நிலையில், அதற்கான பாடப் புத்தகங்களை பள்ளிகளில் வெள்ளிக்கிழமையே விநியோகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமையன்று பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement