Ad Code

Responsive Advertisement

மாணவனுக்கு 5 நாளில் கல்விக்கடன் வங்கிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பிடெக் மாணவனுக்கு 5 நாட்களில் கல்விக் கடன் வழங்குமாறு வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த முத்துக்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
நான் விழுப்புரம் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறேன். எனது பெற்றோர் இறந்ததால் எனது உடன்பிறந்தவர்களின் உதவியுடன் படித்து வருகிறேன். இந்நிலையில், எனது படிப்புக்காக கல்விக் கடன் கேட்டு காயல்பட்டினத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மனு கொடுத்தேன். எனது மனுவை வங்கி நிர்வாகம் பரிசீலிக்கவில்லை. இதனால், எனக்கு கல்விக் கடன் வழங்கக் கோரி முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினேன்.  எனது மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 15 நாட்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வங்கி மேலாளருக்கு 2013 அக்டோபரில் உத்தரவிட்டது.

ஆனால், எனது மனுவை வங்கி மேலாளர் பரிசீலிக்கவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவையும் அமல்படுத்தவில்லை. எனவே, வங்கி மேலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, மனுதாரர் கடன்கோரி அனைத்து ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அதை மேலாளர் பரிசீலிக்கவில்லை என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி அளித்த உத்தரவில், வங்கி நிர்வாகம் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் மனுதாரர் உடனடியாக மேலாளரிடம் கொடுக்க வேண்டும். அந்த ஆவணங்களைப் பெற்றவுடன் 5 நாட்களுக்குள் கல்விக் கடன் தொகையை மனுதாரருக்கு வங்கி தரவேண்டும். இந்த நடைமுறைகள் முடிந்து ஜனவரி 6ம் தேதி வங்கி நிர்வாகம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement