Ad Code

Responsive Advertisement

மாணவர்களின் பாதுகாப்பு அதிகரிக்க சிறப்பு கவனம்! தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

'பள்ளி மாணவிகள் பள்ளிக்கு வருவதும், வீடுகளுக்கு செல்லும் போதும் தனியாக செல்வதை தவிர்த்து, குழுவாக, பாதுகாப்பாக செல்லவேண்டும். மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கண்காணிப்பை அதிகரிக்க, அனைத்து தலைமையாசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு, பல்வேறு வழிமுறைகளில் கேள்விக்குறியாகிவருகிறது. வாகன விபத்து, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால், தொடர்ந்து மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதை உணர்ந்து, பள்ளிக்கல்வித்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.அதன்படி, மாணவிகள் பள்ளிக்கு வருதல் மற்றும் வீடுகளுக்கு திரும்பும் போது, தனித்தனியாக செல்லாமல், குழுவாக வரவேண்டும். மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தல் மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக, மாணவர்கள் ஆட்டோ ரிக்ஷாவில் மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்த் தல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், டெங்கு, சிக்-குன்-குன்யா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் உரிய அறிவுரை வழங்கவேண்டும். பள்ளி வளாகத்தில் மாண வர்களுக்கு எட்டக்கூடிய வகையில், மின்சாதன பொருட்கள் இருக்கக்கூடாது. மின்சார ஒயர்கள் செல்வதை அனுமதிக்கக்கூடாது என பல்வேறு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி கூறியதாவது: தலைமையாசிரியர் கூட் டத்தில், மாணவிகளின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துவது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தையும், நெறிமுறைகளையும் பின்பற்றவும், உடற்பயிற்சி, யோகா கற்றுத்தருவதை உறுதிசெய்யும் படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவிகள் பள்ளிக்கு வந்து, திரும்பும் பொழுது பாதுகாப்பு அதிகப்படுத்த கூறப்பட்டுள்ளது. ஒரு பகுதியிலிருந்து வரும் மாணவ, மாணவிகளை குழுவாக ஒருங்கிணைத்து வீடுகளுக்கு அனுப்புகின்றோம். 

பெற்றோர்கள் தவிர, அறிமுகம் இல்லாத நபர்களுடன் மாணவர்களை அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த, அனைத்து தகவல்களும், பெற்றோர் கூட்டத்தில் அறிவுறுத்தப்படவுள்ளது. இந்த விஷயத்தில் பெற்றோர் ஒத்துழைப்பும் அவசியம்.இவ்வாறு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement