Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் கழிப்பறைகளை பூட்டி வைக்கக் கூடாது: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிகளில் கழிப்பறைகளைப் பூட்டி வைக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தபோது, பல அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் உள்ளபோதும் பயன்பாடில்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெரும்பாலான பள்ளிகள் பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வு மையங்களாக செயல்பட உள்ளன. தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கும், கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் தேர்வு மையங்களில் போதிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இருந்தும் பயன்படுத்தப்படாமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே, வருகிற மூன்று மாதங்களில் அனைத்துப் பள்ளிகளிலும் முழுமையாக கழிப்பறை வசதிகளை பயன்படுத்துகின்ற வகையிலும், பூட்டிய நிலையில் உள்ள கழிப்பறைகளில் சிறிய பழுதுபார்ப்புப் பணிகளை முடித்து முழுமையான பயன்பாட்டுக்கும் கொண்டுவர வேண்டும்.

சிறிய பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் மூலம் வழங்கப்பட்ட பள்ளி பராமரிப்பு நிதியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், பெற்றோர், ஆசிரியர் கழக நிதி அல்லது பள்ளி வசதி நிதியையும் பயன்படுத்தலாம்.

பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை தண்ணீர் வசதியுடன் மாணவ, மாணவியர் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் பள்ளிகளில் கழிப்பறைகளை பூட்டிய நிலையில் வைத்திருக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement