Ad Code

Responsive Advertisement

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் எப்போது?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளை கட்டுவது எப்போது என்று மாவட்ட திட்டக் குழுவில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

காஞ்சிபுரம் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சித் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் நடந்த விவாதம்:

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உள்ளாவூர் பிரபாகரன் (அ.தி.மு.க.): காஞ்சிபுரம் மாவட்டம், உள்ளாவூரில் கடந்த 1981-இல் அரசு ஆரம்பப் பள்ளி தொடக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

ஆனால் ஆரம்பத்தில் எந்தக் கட்டடத்தில் பள்ளி நடைபெற்றதோ, அதே நிலையில் உள்ள கட்டடங்கள்தான் இன்றளவும் உள்ளன. கூடுதல் வகுப்பறை கட்ட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பள்ளிக்கு அருகில் இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட இடங்கள் உள்ளன. அந்த இடத்தில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட அனுமதி கோரப்பட்டது.

ஆனால் இதுவரை அதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்து சமய அறநிலையத் துறையிடம் நீண்ட கால குத்தகை அடிப்படையில் கட்டடம் கட்ட அனுமதிப் பெற்று மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஆட்சியர்: இது குறித்து பரிசீலிக்கப்படும்.

மாவட்ட சுகாதார நலப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கிருஷ்ணராஜ்: நோய்த் தடுப்பில் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

டெங்கு காய்ச்சல் நோயைத் தடுக்க குழுக்களாகச் சென்று மருத்துவக் குழுவினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இருந்த போதிலும் உத்தரமேரூரை அடுத்த ராவத்த நல்லூர், இளநகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டபோது, ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சாலைப் பணிகளுக்குத் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடாமல் விடப்பட்டதே காரணமாக இருந்தது.

இதுகுறித்து குறிப்பிட்ட ஊராட்சிகளுக்கு எடுத்துரைத்தும் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே இதுபோன்ற குறைபாடுகளை ஊராட்சி நிர்வாகங்கள் நீக்க உடனடி நடவடிக்கை எடுத்தால், நோய்ப் பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க முடியும்.

இவ்வாறு விவதாங்கள் நடைபெற்றன. மேலும் இந்தக் கூட்டத்தில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தயாரிக்கப்படும் சமுதாயப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள், மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் துறைவாரியான வளர்ச்சித் திட்டங்கள், வங்கிக் கடன் திட்டங்கள் ஆகியன குறித்து கால்நடைப் பராமரிப்புத் துறை, அனைவருக்கும் கல்வி இயக்ககம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நீர் வள ஆதாரத் துறை, சமூக நலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, சுகாதாரத் துறை, வேளாண்மைத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மின்சார வாரியம் ஆகிய துறைகள் ரீதியாக விவாதிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.சோமசுந்தரம், நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க. முத்துமீனாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement