Ad Code

Responsive Advertisement

தமிழக முதன்மை செயலாளர் சாந்தினி கபூர் விபத்தில் பலி உடன் சென்ற மேலும் 2 பேரும் சாவு


பெங்களூரு சென்ற போது கார்-வேன் விபத்தில் சிக்கி தமிழக முதன்மை செயலாளர் சாந்தினி கபூர் பலியானார். காரில் உடன் சென்ற மேலும் 2 பேரும் இறந்தனர்.

தமிழக முதன்மை செயலாளர்

தமிழக அரசின் முதன்மை செயலாளராக (அரசின் சிறப்பு செயலாக்க திட்டங்கள்) இருந்தவர் சாந்தினி கபூர் (வயது 55). மூத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் நேற்று சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்றார்.

அந்த காரில் சாந்தினி கபூருடன், அவரது தங்கை பெட்ரிசியா (45), தங்கையின் கணவர் ரிச்சர்ட் சிருஷ்டி (48), இவர்களின் மகள் ஆனா கிறிஸ்டினா (20) ஆகியோர் சென்றனர். காரை சென்னை அண்ணாநகர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் (52) ஓட்டினார்.

நேற்று மாலை கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேனின் பின்னால் ஓசூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி ஓசூரை சேர்ந்த காண்டிராக்டர் சதீஷ் உள்பட 7 பேர் பயணம் செய்தனர்.

சாந்தினி கபூர் உள்பட 3 பேர் சாவு

முதன்மை செயலாளர் சாந்தினி கபூர் சென்ற கார், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி சாலையின் எதிர் திசைக்கு சென்றது. அப்போது அந்த சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு வேன் மீது கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார், அருகில் உள்ள தடுப்பு சுவரிலும், மின்கம்பத்திலும் மோதி நின்றது.

இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த முதன்மை செயலாளர் சாந்தினி கபூர், அவரது தங்கை கணவர் ரிச்சர்ட் சிருஷ்டி, காரை ஓட்டிச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

காருக்குள் இருந்த ஆனா கிறிஸ்டினா, அவரது தாய் பெட்ரிசியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் வேனின் பின்னால் வந்த சதீஷ் குடும்பத்தினர் வந்த காரும் வேன் மீது மோதியது. இதில் அவர்கள் 7 பேரும் லேசான காயம் அடைந்தனர்.

விபத்தில் சிக்கிய ஆனா கிறிஸ்டினா மற்றும் அவரது தாய் பெட்ரிசியா ஆகியோரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.

அவர்கள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் கிறிஸ்டினா, பெட்ரிசியா இருவரும் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

காரணம் என்ன?

விபத்துக்குள்ளான காரின் முன்பக்க டயர் வெடித்ததால், கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய 3 வாகனங்களையும் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தார்கள்.

இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்பம்

விபத்தில் பலியான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாந்தினி கபூர் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர். 3.9.1960 அன்று பிறந்தார். ஆங்கிலத்தில் முதுநிலை பட்டம் படித்த அவர், ஐ.ஏ.எஸ். படித்து 1983-ம் ஆண்டு தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். அவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, பிரெஞ்சு ஆகிய மொழிகள் தெரியும்.

பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மேலாண்மை இயக்குனர், சமூகநீதி, அதிகாரமளித்தல் துறையின் கமிஷனர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்த அவர் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பரில் முதன்மைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

கைத்தறி மற்றும் ஜவுளித்துறை உள்ளிட்ட சில துறைகளில் முதன்மைச் செயலாளராக சாந்தினி கபூர் பணியாற்றினார். 6.11.12 அன்று சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் முதன்மைச் செயலாளராக பதவி ஏற்ற அவர், இறக்கும் வரை அந்த பதவியில் நீடித்தார். இவர் 1995-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகள் சென்னை கலெக்டராகவும் பணியாற்றி இருக்கிறார்.

அவரது கணவர் பீட்டர் ராஜ்கபூருடன் அடையாறு சாஸ்திரி நகர் 5-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தார். சாந்தினி கபூருக்கு சஞ்சனா மரிய கபூர் என்ற மகள் உள்ளார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரை பார்க்க சென்றபோது தான் விபத்து நடந்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement