Ad Code

Responsive Advertisement

நேற்று... இன்று... நாளை...? : தொடக்கப் பள்ளி மாணவர்களின் சோக வரலாறு : அதிகாரிகள் கண்ணில் இதெல்லாம் படாதா?

கல்வி அதிகாரிகளின் அலட்சியத்தால், பாதுகாப்பான வகுப்பறை மற்றும் மதிய உணவின்றி நாடோடிகளாக, ஒவ்வொரு இடமாக மாறி, அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.

சென்னை செங்குன்றம் அடுத்த நல்லுார் ஊராட்சியின் வி.பி.சிங் நகர், -அன்னை இந்திரா நினைவு நகரில் சோழவரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. அங்கு, 39 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.அவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர்தான் வகுப்பு எடுக்கிறார். இந்த பள்ளிக்கென அடிப்படை வசதிகளுடன் கூடிய, நிரந்தர பாதுகாப்பான கட்டடம் இல்லை. கடந்தாண்டு வரை, அந்த பகுதியில் உள்ள சிறிய வாடகை வீட்டில் பள்ளி இயங்கியது.
பெற்றோர் எதிர்ப்பு
சாலை மட்டத்தில் இருந்து, 15 அடி ஆழத்தில் உள்ள அந்த இடத்தில் மழைநீர் புகுந்ததால், அங்கிருந்து பள்ளி இடம் மாற்றப்பட்டது. மேட்டு பகுதி கோவில் அருகே, 10 அடி அகலம், 10 அடி நீளம் என்ற குறுகிய இடத்தில் ஓலை குடிசை அமைக்கப்பட்டு, அதில் சில மாதம் பள்ளி இயங்கியது.
இந்த நிலையில் கடந்தாண்டு, கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் நினைவு தினம் அங்கு அனுஷ்டிக்கப்பட்டது. அப்போது, பெற்றோர் மற்றும் பகுதிவாசிகள், அந்த பள்ளியின் அபாய நிலை குறித்து புகார் எழுப்பினர்.
இதையடுத்து, அருகில் உள்ள வீட்டின் ஒரு பகுதியில் கட்டப்பட்டிருந்த, சிறிய கடைக்கு பள்ளி இடம் மாற்றம் செய்யப்பட்டது. அதில், 10 மாணவர்கள் வரைதான் அமர முடியும். இதனால், அங்குள்ள மரத்தடியில் தான் வகுப்புகள் நடக்கின்றன. கழிப்பறை வசதியில்லாததால் மாணவ,
மாணவியர் இயற்கை உபாதைகளை கழிக்க, அருகில் உள்ள திறந்தவெளி பள்ளங்களுக்குத்தான் சென்று வருகின்றனர்.
புதைகுழியான இடம்
அங்கு நடந்த, மண் திருட்டால், 15 அடி ஆழம் வரை பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் தேங்கிய மழைநீரால் சேறும், சகதியுமான புதைகுழிகளும் உருவாகி உள்ளன.அங்கு படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி மட்டுமின்றி, அவர்களுக்கான மதிய உணவும், இதுவரை கிடைக்கவில்லை என்பது வேதனை. கடந்தாண்டு, பெற்றோரால் எழுந்த புகாரின் எதிரொலியாக, 15.60 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி, கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. ஆனால் நேற்று வரை அடித்தளம் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது.
ஆமை வேகத்தில் நடக்கும் கட்டுமான பணி காரணமாக, கட்டடம் முழுமையாக உருவாக இன்னும், பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதன் அருகில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் , 2 மாதத்திற்கு முன் கட்டி முடிக்கப்பட்ட, கழிப்பறைக்கு, இன்னும் தண்ணீர் வசதி இல்லை.

பள்ளத்தில் உருவாகிறது பள்ளி

சாலை மட்டத்தில் இருந்து 15 முதல் 20 அடி ஆழத்திற்கு மண் வெட்டி எடுக்கப்பட்ட பள்ளத்தாக்கு பகுதியில்தான் பள்ளிக்கான புதிய கட்டடம் கட்டப்படுகிறது. அதன் ஒரு பக்கம் மழைநீர் தேங்கிய பள்ளம் புதைகுழியாக உருவாகி உள்ளது. மறு பக்கம் இடுகாடு உள்ளது. இதனால் மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பெற்றோர் கூறுகையில், 'எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது. பாதுகாப்பும் இல்லை, மதிய உணவும் இல்லை. புதிய கட்டடமும் பள்ளத்தில் உள்ளது. மழைக்காலத்தில் பள்ளிக்கு சென்று வர முடியுமா' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement