Ad Code

Responsive Advertisement

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்: சந்தீப் சக்சேனா

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விண்ணப்பித்துள்ள அனைத்துப் பெயர்களும் கணினியில் சேர்க்கப்பட்டு, அவற்றைச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 86 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் நிறைவடைந்து, இன்னும் 2 வாரங்களில் பெயர் சேர்ப்பு, திருத்தம் தொடர்பான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடுவர். எனவே, திட்டமிட்டபடி ஜனவரி 5-ஆம் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தொடர்ந்து சேர்க்கலாம்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டதுடன், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி முடிந்து விடாது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது மிகவும் நல்லது.

தற்போது நடந்து முடிந்த திருத்தப் பணியில் 20 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை அச்சிடும் பணி நடைபெறுகிறது. அச்சிடப்பட்டதும், சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர் நேரடியாக வந்து அந்த அட்டைகளை வழங்குவார்கள்.

ஏற்கெனவே கருப்பு-வெள்ளை நிறத்தில் உள்ள வாக்காளர் அடையாள அட்டைகளைத் தொலைத்தவர்களுக்கு ரூ.25 கட்டணம் வசூலித்து, வண்ண அட்டைகளை வழங்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். மேலும், அடுத்த கட்டமாக அனைவருக்குமே அடுத்த ஆண்டுக்குள் வண்ண அடையாள அட்டைகளை வழங்கி விடலாமா என்றும் யோசித்து வருகிறோம்.

தமிழகத்தில் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்ட விவரங்களைக் கேட்டு இந்தியத் தேர்தல் ஆணையம் எனக்கு கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அதற்கும் வாக்காளர் அடையாள அட்டைக்குமான தொடர்பு குறித்து உடனே பதில் கூற முடியவில்லை என்றார் சந்தீப் சக்சேனா.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement