Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி: 95 சதவீதமாக உயர்த்த இலக்கு: பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா

மாநில அளவிலான 42-வது ஜவாஹர்லால் நேரு மூன்று நாள் அறிவியல், கணித கண்காட்சி சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கியது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

 இந்தக் கண்காட்சியில் மிக்ஸி இயந்திரம், கார் டைனமோவை வைத்து மின்சாரம் தயாரித்தல், இயந்திரம் மூலம் பாதாளச் சாக்கடை அடைப்பை நீக்குதல், வீடுகளுக்கான முழு அளவிலான பாதுகாப்பு அம்சங்கள், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் ரோபோ இயந்திரம் என மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

 முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் டி.சபிதா பேசியது:

 இந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் 90 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அடுத்தக் கல்வியாண்டில் இந்தத் தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 29 லட்சம் மாணவர்களுக்கு ரூ,3,650 கோடி செலவில் மடிக் கணினி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கும் இந்தத் திட்டம், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்றும் திட்டமாக மாறியிருக்கிறது.

முன்னதாக, மாணவர்களுக்கு ஒரு செட் சீருடை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்தச் சீருடைகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4 செட்டுகளாக மாற்றினார். இதன் காரணமாக, 50 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

 சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவது குறைவாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் 400 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோன்று, 810 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. புதிதாக நடுநிலைப் பள்ளிகள், புதிய தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 1,534 பள்ளிகள் நமது மாநிலத்தில் இந்த 4 ஆண்டுகளில் மட்டும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தப் பள்ளிகளுக்காக மட்டும் 8 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.

 அறிவியல் கண்காட்சி:

 இந்த மாநில அறிவியல், கணிதக் கண்காட்சியில் 138 பள்ளிகள் பங்கேற்றுள்ளன. இதில் 70 பள்ளிகள் நமது அரசுப் பள்ளிகள் ஆகும். 30 பள்ளிகள் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் ஆகும். மீதமுள்ள 38 பள்ளிகள் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆகும், என்றார் அவர்.

அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி பேசும்போது, அறிவியல் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு வந்திருக்கிறோம்.

வெறும் புத்தகங்களைப் படித்து மட்டும் அறிவியல், கணிதம் இரண்டு விஷயங்களையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியாது என்றார்.

 பால் வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement