Ad Code

Responsive Advertisement

மத்திய அரசின் உத்தரவுப்படி பள்ளிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: தமிழக போலீசார் நடவடிக்கை

மத்திய அரசின் உத்தரவுப்படி பள்ளிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: தமிழக போலீசார் நடவடிக்கை
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் நேற்று முன்தினம் தலீபான் தீவிரவாதிகள் புகுந்து 132 குழந்தைகளை ஈவு இரக்கம் இன்றி சுட்டுக்கொன்றனர்.


இந்த கொடூர சம்பவத்தை பல்வேறு நாடுகளும் கண்டித்து உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்து இருக்கிறார்.

பாகிஸ்தானை போன்று இந்தியாவிலும் கல்வி நிறுவனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், டெல்லியில் வருகிற ஜனவரி 26–ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.


எனவே இந்த சூழ்நிலையில் சிமி, லஸ்கர்–இ–தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள உளவுத்துறை, மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா சிறையில் இருந்து சமீபத்தில் சில தீவிரவாதிகள் தப்பிச் சென்றதையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இது குறித்து நேற்று பாராளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திய தமிழக டி.ஜி.பி. அசோக்குமார், பள்ளிக்கூடங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் உத்தரவிட்டார். பள்ளிக்கூடங்களில் வகுப்பு நடக்கும் போது போலீஸ் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இதேபோல் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜும் உயர் அதிகாரிகளுடன், பள்ளிக்கூட குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். சென்னை நகரில் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ரோந்து செல்வதை தீவிரப்படுத்துமாறு போலீசாரை அவர் கேட்டுக்கொண்டார்.

போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சமீபத்தில் பள்ளிக்கூட முதல்வர்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியதும், அப்போது பள்ளிக்கூடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துமாறும், காவலாளிகளை நியமிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதும் நினைவிருக்கலாம்.

எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னை நகரில் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை நகருக்குள் வரும் வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement