Ad Code

Responsive Advertisement

சிறந்த மனிதர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு: நீலகிரி கலெக்டர் பேச்சு

ஊட்டி ஜே.எஸ்.எஸ்.சி. பார்மசி அரங்கில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன் எம்.பி., கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் சங்கர் பேசும் போது கூறியதாவது:–

மாணவர்களை சிறந்த அறிவாளியாகவும், அன்பு, விடா முயற்சி, ஒழுக்கம் கொண்ட நல்ல மனிதர்களாக ஆசிரியர்கள் உருவாக்குகின்றனர். இதனால் தான் ஆசிரியர்களின் பணி புனிதமானது என்று அழைக்கப்படுகிறது. ஒரு மாணவனிடம் சிறு வயதில் கல்வி கற்பித்த ஆசிரியர் யார் என்று கேட்டால், அவர்களது பெயர்களை மறக்காமல் சொல்வார்கள்.

ஆசிரியர் ஒருவருக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் தன்னால் உருவாக்கப்பட்ட மாணவன் உயர்ந்த பதவியில் இருக்கும் போது, அவனை பார்க்கும் போது அருகில் உள்ள நண்பர்களிடம் இவன் எனது மாணவன் என்று சொல்லி மகிழ்வார்கள். எனவே தான் சிறந்த மனிதர்களை உருவாக்குவதில் ஆசிரியருக்கு முக்கிய பங்கு உள்ளது.

கடந்த 2013–14–ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நீலகிரி மாவட்டம் 92 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 14–வது இடம் பிடித்து உள்ளது. பிளஸ்–2 தேர்வில் 84.05 சதவீதம் தேர்ச்சி பெற்று 24–வது இடத்தை பெற்று உள்ளது.

வரும் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 பொது தேர்வுகளில் குறைந்தது 100 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி விகிதங்களில் தமிழக அளவில் நீலகிரி மாவட்டம் முதல் 10 இடங்களை பெற ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். இதற்காக மாணவர்களை தயார் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, 2013–14–ம் கல்வியாண்டில் நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்கள் மற்றும் பணி நிறைவு பெற்ற 16 ஆசிரியர்களை பாராட்டி கலெக்டர் சங்கர் பரிசுகளை வழங்கினார்.

இந்த விழாவில் தாட்கோ தலைவர் கலைச்செல்வன், மாநில ஆவின் தலைவர் அ.மில்லர், முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement