Ad Code

Responsive Advertisement

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலியல் கல்வி - சென்னை உயர் நீதிமன்றம்

 பாலியல் கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்று கொடுப்பது பற்றி தமிழக அரசு இரண்டு மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சூளையை சேர்ந்த வக்கீல் டி.சித்ராதேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
மாணவர்கள் குறிப்பாக, பெண் குழந்தைகள் தினந்தோறும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். வீடு, பள்ளி, வீதி என பல்வேறு இடங்களில் பெண் குழந்தைகள் இக்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். மத்திய அரசு கடந்த 2007ம் ஆண்டு நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், 53 சதவீத குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்று கூறியுள்ளது. இந்த கொடுமை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்த கொடுமையில் குழந்தைகள் சிக்காமல் இருக்க, பள்ளி பாடங்களில் பாலியல் கொடுமை தொடர்பான விவரங்களை பாடங்களாக்க வேண்டும். மேலும், பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த வேண்டும். பள்ளிப்பாடங்களில் பாலியல் கொடுமை தொடர்பான பாடங்களை சேர்க்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 1ம் தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பினேன்.

அந்த மனுவில், வரும் 19ம் தேதி குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் எதிர்ப்பு தினம் கொண்டாடும் வேளையில், பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி பள்ளி கல்வித்துறையை கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அரசு என் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், மகாதேவன் ஆகியோர் விசாரித்து, மனுதாரரின் கோரிக்கையை 8 வாரத்துக்குள் பரிசீலிக்கும்படி தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு ப்ளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, சிறப்பு அரசு வக்கீல் கிருஷ்ணகுமார் ஆகியோரும் மனுதாரர் சார்பாக வக்கீல் சூரியபிரகாசமும் ஆஜராகி வாதாடினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement