Ad Code

Responsive Advertisement

மருத்துவ கல்லூரிகளில் சேர முடியாத மாணவர்கள்:உச்ச நீதிமன்றத்தை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிக கட்டணத்தால், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர முடியாத, 28 மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தை அணுக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த கல்வியாண்டில், மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில், 28 பேருக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது.
கல்விக் கட்டணம் அதிகமாக உள்ளதால், தனியார் கல்லுாரிகளில் சேர, அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதே நேரத்தில், சென்னை, வண்டலுாரில் உள்ள தாகூர் மருத்துவக் கல்லுாரி, திருச்சியில் உள்ள சென்னை மருத்துவக் கல்லுாரிக்கு, மாணவர்கள் பட்டியலை, தேர்வுக் குழு அனுப்பியது.

அதன் அடிப்படையில், மாணவர் சேர்க்கை பட்டியலை, இரண்டு கல்லுாரிகளும் வெளியிட்டன. இந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்கள், தங்களை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் என்றும், அரசு ஒதுக்கீட்டின் கீழ், இந்த கல்லுாரிகளில் தங்களை சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, உயர் நீதிமன்றத்தில், 28 பேர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: தகுதி அடிப்படையிலான பட்டியலை அனுப்புவதற்கு பதில், மனுதாரர்களைப் போன்ற தகுதியுள்ளவர்களை விட்டு விட்டு, வேறு பட்டியலை, தேர்வுக்குழு அனுப்பியதாக தெரிகிறது.
விளக்க குறிப்பேட்டில், 'தனியார் கல்லுாரியில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பவில்லை என்றால், அடுத்ததாக வரும் கவுன்சிலிங்கில், அந்த கல்லுாரியில் இடம் ஒதுக்க கோர முடியாது' என, கூறப்பட்டுள்ளது. இதை, அரசு பின்பற்றியதாக தெரிகிறது.
எனவே, தனியார் கல்லுாரிகளில் கிடைத்த இடங்களை ஏற்காதவர்களின் பெயர்களை நீக்கி விட்டு, வேறு பட்டியலை, இரண்டு கல்லுாரிகளுக்கும் அனுப்பி உள்ளது. அதனால், மனுதாரர்களை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு, இரண்டு கல்லுாரிகளிலும் இடம் கிடைத்துள்ளது.தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு, 3 லட்சம் ரூபாய், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே, அரசு
கல்லுாரிகள் என்றால், 12 ஆயிரம் ரூபாய் தான். அதிக கட்டணம் செலுத்த முடியாததால் தான், தனியார் கல்லுாரிகளில் கிடைத்த ஒதுக்கீட்டை, மனுதாரர்களால் ஏற்க முடியவில்லை.
தகுதி பட்டியலில் இருந்து, மனுதாரர்களை நீக்கி இருக்கக் கூடாது. அவர்களை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியலை அனுப்பியதன் மூலம், மனுதாரர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.
இரண்டு கல்லுாரிகளுக்கும் அனுப்பப்பட்ட பட்டியலை ரத்து செய்தால், புதிய குழப்பம் ஏற்படும். அந்தக் கல்லுாரிகளில் ஏற்கனவே மாணவர்கள் சேர்க்கப்பட்டு, படிப்பை துவங்கி விட்டனர்.
அந்த கல்லுாரிகளில், 84 இடங்கள், காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கு பட்டியலை அனுப்பும்படி உத்தரவிட்டால், எந்த கொள்கையை அரசு பின்பற்றும் என, தெரியவில்லை.
காலியிடங்களில், மனுதாரர்களை சேர்க்க உத்தரவிட்டால், இவர்களை விட, அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஆரம்பித்து விடுவர்.
எனவே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மனுதாரர்கள் அல்லது இரண்டு தனியார் கல்லுாரிகள் அல்லது தேர்வுக் குழு, உச்ச நீதிமன்றத்தை அணுகி, நிவாரணம் கோரலாம்.
இவ்வாறு, நீதிபதி ராமசுப்ர மணியன் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement