Ad Code

Responsive Advertisement

இப்படியும் ஓர் அரசுப் பள்ளி!

விருத்தாசலத்தை அடுத்த பெ.கா.வீரட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சித் தொடக்கப் பள்ளி தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்பட்டு வருவதாக அந்த கிராம மக்களும், கல்வி அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர். கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெ.கா.வீரட்டிக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 45-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இப்பள்ளியில், அண்மையில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சு.தமிழ்ச்செல்வி கற்றலை இனிமையாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். பள்ளியின் முகப்பு முதல் வகுப்பறை வரை பாடங்கள் தொடர்பான வண்ண ஓவியங்களை, கிராமத்தில் உள்ள காமராஜர் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் உதவியுடன் வரைந்துள்ளார்.
முகப்பு வாயிலில் குழந்தைகளை கவரும் வகையிலான குழந்தை கதாபாத்திர சித்திரங்கள், காமராஜர் குழந்தைகளுடன் நிற்பது போன்ற ஓவியம், காரல்மார்க்ஸ், ஐன்ஸ்டீன், சாக்ரடீஸ், காந்தி போன்ற அறிஞர்களின் பொன்மொழிகள் வரவேற்கின்றன. 
வகுப்பறை நுழைவு வாயிலில் "சிட்டுக்குருவிகளின் ஆகாயம், பட்டாம்பூச்சிகளின் பூந்தோட்டம்' என பெயரிட்டுள்ளனர். வகுப்பறைகளுக்கு வெளியே ஒüவையார், இந்திய வரைபடம், உலக வரைபடம் போன்றவை வரையப்பட்டுள்ளன. 
வகுப்பறைகளுக்குள், தமிழ், ஆங்கில எழுத்துகள், ரயில் போன்ற ஓவியங்கள் வரைந்து அதனுள் நாள்கள், மாதங்கள் போன்றவற்றையும், கணிதப் பாடம் தொடர்பான முக்கோணம், செவ்வகம், உருளை போன்ற படங்களையும், சரிவிகித உணவு முக்கோணம் போன்றவற்றை மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் வகையில் வரைந்துள்ளனர். 
திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், விவேகானந்தர், ஜவாகர்லால் நேரு, காந்தி, பகத்சிங், பெரியார், சுபாஷ்சந்திரபோஸ் போன்ற பல்வேறு தலைவர்களின் படங்களுடன் அவர்கள் கூறிய பொன்மொழிகளும்எழுதியுள்ளனர். 
இதேபோல, தமிழ் இலக்கிய நூல்களான ஐம்பெருங்காப்பியங்கள், பதினெண் கீழ்கணக்கு நூல்கள், திருக்குறள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றையும் வண்ண ஓவியங்களால் அழகூட்டியுள்ளனர்.
மேலும் மாணவர்களிடையே திறனை வளர்ப்பதிலும் தனி கவனம் செலுத்தப்படுகிறது. இதற்கு, குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம், சுதந்திர தினம் போன்றவற்றை பயன்படுத்தி மாணவர்களிடையே கலைத் திறனையும், விளையாட்டில் ஆர்வத்தையும் ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
இதுகுறித்து தலைமையாசிரியர் சு.தமிழ்ச்செல்வி கூறியது: கற்றல் என்பது செவிப்புலன் வழியாக மட்டும் நடைபெறுவதில்லை. காட்சிப் புலன் வழியாகவும் நடைபெறுகிறது. வகுப்பறை சூழல் மாணவர்களை ஈர்க்கக்கூடியதாக இருந்தால்தான் அவர்களால் சிறப்பாக கற்க முடியும். தனியார் பள்ளிகளின் கவர்ச்சிகரமான செயல்பாடுகள் மற்றும் விளம்பரங்களால், பெற்றோர் தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அரசுப் பள்ளியிலும் இதுபோன்று மாணவர்களை ஈர்க்கக்கூடிய நிலையை உருவாக்க முடியும், கல்வித் தரத்தையும் உயர்த்த முடியும் என்பதற்காகத்தான் இந்த முயற்சியில் ஈடுபட்டோம்.
இதற்கு கிராமத்தில் உள்ள காமராஜர் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் சக ஆசிரியர் பெரிதும் உதவியாக இருந்தனர் என்றார்.
தலைமை ஆசிரியரின் இந்த முயற்சி பெ.கா.வீரட்டிக்குப்பம் கிராம மக்கள், கல்வி அதிகாரிகள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement