Ad Code

Responsive Advertisement

சிவப்பு விளக்குகளை யார் யார் பயன்படுத்தலாம்? தமிழக அரசு புதிய உத்தரவு

சிவப்பு, நீல வண்ண விளக்குகளை எந்தெந்த அதிகாரிகள் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு புதிய உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

அரசு வாகனங்களின் மேல்புறத்தில் சிவப்பு விளக்குகள் பொருத்துவதை முறைப்படுத்துவது தொடர்பாக, மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், அரசு வாகனங்களில் சுழலும் வகையிலான சிவப்பு விளக்குகளையும், சாதாரண வகை சிவப்பு விளக்குகள், நீல வண்ண விளக்குகளை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையர் பரிந்துரைகளை அனுப்பியுள்ளார். அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு உத்தரவைப் பிறப்பிக்கிறது.

அதன்படி, சுழலும் வகையிலான சிவப்பு விளக்குகளைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றவர்கள்: மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர்.

சுழலும் வகையில் இல்லாமல், சாதாரண வகை சிவப்பு விளக்குகளை 14 பேர் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் விவரம்: சட்டப்பேரவை துணைத் தலைவர், தலைமைச் செயலாளர், ஆலோசனைக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள், மாநில ஆலோசனைக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், மாநில சட்ட ஆணையத்தின் தலைவர், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர், மாநில தேர்தல் ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்குரைஞர், மாநில திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஆகியோர். இதேபோல, காவல் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் தங்களது வாகனங்களில் சுழலும் வகையிலான நீல வண்ணத்தைக் கொண்ட விளக்குகளைப் பொருத்திக் கொள்ளலாம்.

அவர்களின் விவரம்: போலீஸ் டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி.,க்கள், ஐ.ஜி.,க்கள், டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் (சட்டம்-ஒழுங்கு) ஆகியோர்.

சில அதிகாரிகள் தங்களதுப் பணி காரணமாக, சாலை வழியாகச் செல்லும் போது அவர்கள் தடுக்கப்படாமல் இருப்பதற்காக தங்களது வாகனங்களில் சுழலும் வகையிலான நீல வண்ணத்தைக் கொண்ட விளக்குகளைப் பொருத்திக் கொள்ளலாம்.

அந்த அதிகாரிகளின் விவரம்: அரசுத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்களின் தலைவர்கள், மாவட்ட நீதிபதிகள், பெருநகர முதன்மை நீதிபதிகள், உயர் நீதிமன்றப் பதிவாளர், கூடுதல் ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், மாநகராட்சி மேயர்கள், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்கள் ஆகியோர்.

அவசரக் காலங்களில் இயங்கக் கூடிய தீயணைப்பு, மீட்புப் பணித் துறை வாகனங்கள், போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவு வாகனங்கள், காவல் துறையின் ரோந்து வாகனங்கள் ஆகியன சிவப்பு, நீலம், வெள்ளை என மூன்று வகையான நிறங்களில் எதையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், ஆம்புலன்ஸ் வாகனங்களை ஊதா நிறக் கண்ணாடியைக் கொண்ட ஒளிரும் சிவப்பு விளக்குடன் இயக்கலாம் என்று உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement