Ad Code

Responsive Advertisement

750 ஆசிரியர்கள், 120 பள்ளிகளுக்கு விருது - கோவை முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகெளரி, விருதுகளை வழங்கினார்

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் சிறந்த கல்விச் சேவையாற்றி வரும் 750 ஆசிரியர்களுக்கும், 120 பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

காரமடை ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரி சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தேர்ச்சி தரும் பள்ளிகளையும், அதற்கு காரணமான ஆசிரியர்களையும் கெளரவப்படுத்தும் விதமாக ஸ்ரீசக்தி கல்வி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். முதல்வர் வேல்முருகன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பாளராக பங்கேற்ற கோவை முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகெளரி, விருதுகளை வழங்கினார். அவர் பேசியது:

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற ஆன்றோரின் வாக்குப்படி, தெய்வத்திற்கு முன்பாக குரு உள்ளதால், மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்காமல் அன்பு வழியில் நல்வழிப்படுத்தி கல்வி புகட்ட வேண்டும். மாணவர்களை செதுக்கும் சிற்பிகளாகவும், வழிகாட்டும் தீபங்களாகவும் ஆசிரியர்களே உள்ளனர்.

மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கும் ஆசிரியர்களைப் பாராட்டி, கெளரவப்படுத்தும் இந்த முயற்சி பாராட்டிற்குரியது என்றார்.

விழாவில் இத்தாலி நாட்டின் போபலர் டெக்லி ஸ்டடி-டி-மிலோனா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பிரதீப்குமார் வாழ்த்திப் பேசினார்.

தொடர்ந்து, விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் அரசு பள்ளிகளில் கோவை அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், தனியார் பள்ளிகளில் காரமடை வித்யவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கும் ஸ்ரீசக்தி குருகுல விருதும், 8 அரசு மற்றும் 8 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்ரீ சக்தி துரோணாச்சாரியார் விருதும் வழங்கப்பட்டன.

விழாவில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி துறைத் தலைவர் ரோஜாமேரி நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement