தெற்கு ரெயில்வேயில் 5,450 காலி இடங்களை நிரப்ப குரூப்-டி பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.
தெற்கு ரெயில்வேயில் உள்ள சென்னை, திருச்சி, சேலம், மதுரை, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களில் துப்புரவு ஊழியர், கேங்க்மேன், ‘கலாசி’ உள்ளிட்ட பணிகளுக்கான 5,450 இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்கு நாடு தழுவிய அளவில் ரெயில்வே விண்ணப்பம் கோரியிருந்தது.
அதன்படி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், பீகார், பாட்னா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், மராட்டியம் உள்பட நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 11 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல் கட்ட எழுத்து தேர்வு நேற்று தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 225 மையங்களில் நடைபெற்றது.
96 தேர்வு மையங்கள்
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களை பொருத்தமட்டில் சாலிகிராமம், விருகம்பாக்கம், பூந்தமல்லி, பட்டாபிராம், ஸ்ரீபெரும்புதூர், போரூர், கேளம்பாக்கம், ஆவடி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தனியார், அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் 96 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினமே சென்னைக்கு வந்திருந்தனர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் வந்து குவிந்திருந்த அவர்கள் அதிகாலையிலேயே தேர்வு மையத்திற்கு புறப்பட்டு சென்றார்கள். ஆனாலும் மொழி பேசுவதில் சிக்கல், புது இடம் என்பதால் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் தேர்வு மையத்திற்கு தாமதமாக சென்றனர்.
எழுத்துத்தேர்வு
வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்தனர். காலையில் சில இடங்களில் மழை பெய்தது. சூழ்நிலை கருதி தேர்வு மையத்திற்கு தாமதமாக சென்றவர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணி முதல் 12.30 மணி வரை 1½ மணி நேரம் எழுத்துத்தேர்வு நடைபெற்றது.
தேர்வு மையத்தின் உள்ளே செல்போன்கள் மற்றும் தகவல்களை பரிமாற உதவும் எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. சென்னை சாலிகிராமம் ஆற்காடு சாலையில் உள்ள ஆவிச்சி மேனிலை பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு மையத்தின் வெளியே பாதுகாப்பு கருதி போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
மாற்றுத்திறனாளி
சாலிகிராமத்தில் உள்ள தேர்வு மையத்தில் ரெயில்வே தேர்வு எழுதிய நெல்லையை சேர்ந்த மாற்றுத்திறனாளி லட்சுமணன் கூறுகையில், நான் ஆசிரியர் பயிற்சி படிப்பினை நிறைவு செய்து உள்ளேன். நெல்லையில் இருந்து ரெயில் மூலமாக சென்னைக்கு தேர்வு எழுதுவதற்காக வந்தேன். அரசு பணிக்கென்று தனி மதிப்பும், மரியாதையும் உள்ளது. நான் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
அடுத்ததாக வருகிற 9, 16, 23 மற்றும் 30-ந்தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைதோறும் குரூப்-டி பணிக்கான எழுத்து தேர்வுகள் படிப்படியாக நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர் எழுத்து தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை