Ad Code

Responsive Advertisement

பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை

பத்தாம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்கு கோவை பீளமேடு பி.எஸ்.ஜி.,சர்வஜனா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். 

பங்கஜம், தமிழ்: ஆசிரியர்கள் தரும் குறிப்பினை பின்பற்றினால் அதிக மதிப்பெண் பெற முடியும். நுால் ஆசிரியர் பெயர், நுால்களின் பெயர்களை மனதில் பதிய வைப்பதன் மூலம், ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு எளிதில் விடையளிக்கலாம். மனப்பாடப்பகுதியினை எழுதிப்பார்த்து பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பிழையின்றி எழுத முடியும். இதனால், முழு மதிப்பெண் பெற முடியும். கடிதம், கட்டுரை பகுதிகளில், திரும்ப திரும்ப வரக்கூடிய கேள்விகளானது சிறுசேமிப்பு, மழை நீர் சேமிப்பு போன்ற தலைப்புகளில் வரும். உட்தலைப்பிட்டு எழுதினால், கட்டுரை வினாக்களில் முழு மதிப்பெண் பெற முடியும். 

மெஹர்னிசா, ஆங்கிலம்: ஆங்கிலப்பாடம் கடினமானது அல்ல; புரிந்து படித்தால் எளியது. நோட்மேக்கிங் பகுதியில், எளிதாக மதிப்பெண் பெற நோட்ஸ், உட்தலைப்பு போன்றவை தெளிவாக எழுத வேண்டும். விளம்பரப்பகுதி வினாக்களில், முகவரி, படம் வரைதல், சலுகை, தள்ளுபடி போன்றவைகளை எழுதுவதன் மூலம் முழு மதிப்பெண்ணை பெற முடியும். இலக்கணப்பிழையின்றி எழுத வேண்டும். 

மீனலோச்னி, அறிவியல்: கடினமான பாடத்தை முதலில் படிக்கலாம். படம் வரைந்து பாகம் குறி வினா மற்றும் கொடுத்த படத்தில் பாகம் குறி போன்ற வினாக்களுக்கு விடையளிப்பதற்கு முதலில், படங்களையும், பாகங்களையும் மனதில் பதிய வைக்க வேண்டும். அதற்கு அடிக்கடி படங்களை வரைந்து பழகிக்கொள்ள வேண்டும். புத்தகத்தில்,மஞ்சள், நீலம், ப்ரவுன் போன்ற கலர்களில், கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளை படிப்பதன் மூலம் அறிவியல் விஞ்ஞானிகள் பெயர், காரணங்களை அறிதல் போன்றவை தெரிந்து கொள்ள முடியும். ஐந்து மதிப்பெண் வினாவிற்கு விதிகள், அட்டவணை, படம், வினாக்களுக்கு விளக்கமளித்தல் போன்றவைகளை பிழையின்றி பதிலளிக்க வேண்டும். அறிவியலை ஆர்வமாக படித்தால், 100க்கு 100 என்ற இலக்கு வெகுதுாரத்தில் இல்லை. அறிவியல் பாடத்தை ஐந்து அல்லது ஆறு முறை முழுமையாக படித்திருந்தால், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு எளிதில் விடையளிக்கலாம். 

மஞ்சுளா, சமூக அறிவியல்: தேர்ந்தெடுத்து எழுதுக, பொருத்துக உள்ளிட்ட 52 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு புத்தகத்தை முழுமையாக படிப்பதன் மூலம் விடையளிக்க முடியும். காலக்கோடு வரைக பகுதியில், 1900 முதல் 1950 வரை உள்ள காலக்கட்டங்களில், நடந்த முக்கிய சம்பவங்கள் வினாக்களில் கேட்கப்படும். வரைபடம் பகுதியில், ஆசியா வரைபடம் முக்கியமானது. இதில், நாடுகளுக்கு புள்ளிகள் வைக்கக்கூடாது. நகரங்களுக்கு கண்டிப்பாக புள்ளி வைக்க வேண்டும். வினா எண் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். சிகரங்கள், மலைத்தொடர்களுக்கு குறியீடுகள் குறிப்பிட வேண்டும். ஆறுகள், பாலைவனங்கள், மண்வகைகள், பருவகாற்று வீசும் திசைகள், தீவுகள், மலைத்தொடர், பீடபூமி இவைகளை தொடர்பு படுத்தி படிக்கும்போது முழு மதிப்பெண் பெற முடியும். ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு உட்தலைப்பு, ஆண்டுகள், தலைவர்களின் பெயர்கள், முக்கிய நிகழ்வுகள், இடங்கள் ஆகியவற்றை அடிக்கோடிட்டு காட்டுவதால், அதிக மதிப்பெண் பெறலாம். கடைசி பத்து நிமிடங்கள் விடைத்தாள் சரிபார்ப்பதற்காக ஒதுக்க வேண்டும்.

பாலசுப்ரமணியம், கணிதம்: கணிதம் முதல் பாடத்தில் மட்டும் 15 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். எனவே அப்பகுதிக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பத்து பாடங்களில் 120 ஒரு மதிப்பெண் வினாக்கள் உண்டு. அதனை நன்கு படித்தால், முழு மதிப்பெண் பெறலாம். நேர மேலாண்மையை பின்பற்ற வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement