Ad Code

Responsive Advertisement

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள விகித மாற்றம் : எட்டு வாரங்களுக்குள் மனுவை பரிசீலிக்க உத்தரவு - Dinamalar

 இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம்பள விகிதத்தை மாற்றக் கோரிய மனுவை, எட்டு வாரங்களுக்குள் பரிசீலிக்கும்படி, நிதித் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலர், கிப்சன் என்பவர் தாக்கல் செய்த மனு:

ஒரு நபர் கமிஷன் : கடந்த, 2009ல், நிதித் துறை பிறப்பித்த அரசாணையின்படி, இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம், 4,500 ரூபாய், என்ற விகிதத்தில், தமிழக அரசு நிர்ணயித்தது. ஆறாவது ஊதியக் குழுவின் அறிக்கைக்குப் பின், 5,200 ரூபாய் அடிப்படை ஊதியம், தர ஊதியம், 2,800 ரூபாய் என, மாற்றப்பட்டது.
பட்டயப் படிப்பு முடித்த, அமைச்சுப் பணியாளர்களுக்கு இணையாக, இந்த சம்பள விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் கீழ் வரும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களை விட அதிக சம்பளம் பெறுகின்றனர். அவர்களின் அடிப்படை ஊதியம், 9,300 ரூபாய் மற்றும் தர ஊதியம், 4,200 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள முரண்பாட்டை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்ததும், இதுகுறித்து ஆராய ஒரு நபர் கமிஷனுக்கு, அரசு உத்தரவிட்டது.
ஒரு நபர் கமிஷனும், அரசிடம், அறிக்கை தாக்கல் செய்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தைப் போல் அமல்படுத்தினால், அரசுக்கு, ஆண்டுக்கு, 668 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என, கூறப்பட்டுள்ளது.
எங்கள் கணக்குபடி, அரசுக்கு, 310 கோடி ரூபாய் தான் செலவாகும். எனவே, இடைநிலை ஆசிரியர்களின் சம்பள விகிதத்தை, அடிப்படை ஊதியம், 9,300 ரூபாயில் இருந்து கணக்கிட வேண்டும். இதுகுறித்து, தமிழக அரசின் நிதித் துறைக்கு, கடந்த ஆண்டு, செப்டம்பரில், மனு அனுப்பினோம்; எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மத்திய அரசு ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு இணையாக, இடைநிலை ஆசிரியர்களின் சம்பள விகிதத்தை மாற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி ராமநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வெங்கடேச குமார், அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் ஏ.குமார் ஆஜராகினர்.

எட்டு வாரங்களுக்குள்... : நீதிபதி ராமநாதன், பிறப்பித்த உத்தரவு: கடந்த ஆண்டு, செப்டம்பரில் அனுப்பிய மனுவை, பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர், மனுதாரரின் மனுவை, மூன்று மாதங்களில் பரிசீலிப்பதாக தெரிவித்தார். எட்டு வாரங்களுக்குள், மனுதாரரின் மனுவை, நிதித் துறை செயலர், பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி ராமநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement