Ad Code

Responsive Advertisement

ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை : தலைமை ஆசிரியரை சிறைபிடித்து போராட்டம்

அரசு பள்ளியில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, தலைமை ஆசிரியரை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.   காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கொளத்தூரில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் பீம்குமார் (51) மற்றும் 8 ஆசிரியைகள் வேலை பார்க்கின்றனர். இதே பள்ளி வளாகத்தில் ஆரம்ப பள்ளி செயல்படுகிறது. இங்கு 35 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியை, 1 ஆசிரியை வேலை பார்க்கின்றனர்.  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பீம்குமார், பாலியல் தொல்லை கொடுப்பதாக சில ஆசிரியைகள் புகார் தெரிவித்தனர். இதுசம்பந்தமாக மாவட்ட கல்வி அதிகாரிக்கும் தெரியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தலைமைஆசிரியரின் தொல்லை அதிகமானதாக தெரிகிறது. இதனால், கடுமையாக அவதியடைந்த ஆசிரியைகள், ஒரு கட்டத்தில் தங்களது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று காலை ஆசிரியைகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் கொளத்தூர் பகுதி பொதுமக்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். தலைமை ஆசிரியர் பீம்குமாரை அவரது அறையில் சிறைப்பிடித்தனர். தலைமை ஆசிரியருக்கு எதிராக கோஷமிட் டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வின், ஸ்ரீபெரும்புதூர் எஸ்ஐ ராக்கி ஆகியோர்  சம்பவ இடத்துக்கு வந்தனர். பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் பீம்குமாரை மீட்டனர். பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அதற்கு, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் கலைந்து செல்வோம் என்று பொது மக்கள் கூறினர். கல்வித்துறை அதிகாரிகள் மூலமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) நூர் முகமது மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வந்தனர். அங்கிருந்த ஒரு வகுப்பறையில் தலைமை ஆசிரியர் பீம்குமார் மற்றும் புகார் தெரிவித்த ஆசிரியைகளிடம் விசாரித்தனர். இதன் அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அதிகாரிகள் சென்றனர். தலைமை ஆசிரியர் பீம்குமார் கூறுகையில், ஆசிரியைகள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவதில்லை. அவர்களது பணியை சரிவர செய்வதில்லை. மாணவர்கள் முன் வகுப்பறையில் செல்போனில் பேசுகின்றனர். இதுபோன்ற செயல்கள் வேண்டாம் என கண்டித்தேன். இதனால், என் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர் என கூறினார். ஆசிரியைகள் கூறும்போது, தலைமை ஆசிரியரை தவிர மற்ற அனைவரும் பெண்கள். பள்ளியில் உள்ள கழிப்பறையை பூட்டிவிட்டால், நீங்கள் எங்கு செல்வீர்கள் என எங்களிடம் கேட்பார். நான் சொல்கிறபடி நடந் தால் பிரச்னை இருக்காது. இல்லாவிட்டால் உங்களை வேறு ஊருக்கு மாற்றிவிடுவேன் என்று மிரட்டுவார். எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார். எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement