Ad Code

Responsive Advertisement

பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பு

'நடுநிலைப்பள்ளிகளுக்கு, பட்டதாரி  ஆசிரியர்களை நேரடியாக நியமிக்கக் கூடாது; பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்க வேண்டும்' என, ஆசிரியர் சங்கங்கள் இடையே கோரிக்கை வலுத்துள்ளது.

தொடக்க கல்வித்துறை இயக்குனரகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக, 49 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். துவக்கத்தில், நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்ற, இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது வழக்கமாக இருந்தது. சில ஆண்டுகளாக, பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நேரடி நியமனம் மூலமாகவும், பதவி உயர்வு மூலமாகவும் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களும், சிறப்பு ஆசிரியர்களும் பட்டப்படிப்பு, பி.எட்., கல்வித்தகுதி பெறும்போது பட்டதாரி ஆசிரியர்களாக, பதவி உயர்வு பெறுகின்றனர்.

நடுநிலைப்பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியரை நேரடியாக நியமிக்க, ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. பதவி உயர்வு வாயிலாக மட்டுமே, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறும் வாய்ப்புள்ளது; ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக பட்டதாரி ஆசிரியர்களை, நடுநிலை பள்ளிகளுக்கு நியமிக்கக்கூடாது; அவர்களை, உயர்நிலைப்பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும், என இச்சங்களின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'இடைநிலை ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வாயிலாக மட்டுமே, பட்டதாரி ஆசிரியராக தகுதி பெற வாய்ப்புள்ளது. காலி இடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமித்தால், இடைநிலை ஆசிரியர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது. நிறைய இடங்களில், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அந்த இடங்களில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து, பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பளிக்குமாறு, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,' என்றார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement