Ad Code

Responsive Advertisement

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த பள்ளி மாணவர்கள்

வெயிலடிக்கும் மரத்தடியில், கோவில் நுழைவாசலில், மக்கள் நெரிசல் மிகுந்த தெருக்களில் என, சென்னையின் பெரும்பான்மையான இடங்களில், பிச்சைக்காரர்களை பார்க்க முடியும். சோகம் வழியும் அவர்களின் குரல்களுக்கு என்றாவது நாம் காது கொடுத்திருப்போமா? அவர்களிடம் நிறைய கண்ணீர் உண்டு. நம்மிடம் தான் காதுகளில்லை. ஆனால், சிறியவர்கள் என, நாம் நினைக்கும் பள்ளி மாணவர்கள், அவர்களுக்கு பெருவாழ்வு தந்திருக்கின்றனர். பெரம்பூர், 'கல்கி ரங்கநாதன் மான்போர்டு மெட்ரிகுலேஷன்' பள்ளி பிளஸ் 1 மாணவர்கள், அந்த சாதனையை செய்திருக்கின்றனர்.




எப்படி சாத்தியமாயிற்று?

குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இயங்கி வரும் 'மாற்றத்துக்கான வடிவங்கள்' என்ற அமைப்பு, உலகம் முழுவதும் பரவி உள்ளது. நாட்டை மாற்றும் வகையிலான செயல்களை மாணவர்கள் எப்படி உருவாக்குகின்றனர் என்பது குறித்து, ஆண்டு தோறும் அந்த அமைப்பு போட்டி நடத்தி வருகிறது.
அந்தப் போட்டிக்காக, தங்கள் பள்ளியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து, லண்டனில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில், சிறப்பு சான்றிதழ் பெற வைத்தனர். அதையே போட்டிக்கு அனுப்பி வைத்தனர்.உலகம் முழுவதிலும் இருந்து, பல்வேறு நாட்டு மாணவர்கள் பங்கேற்ற அந்த போட்டியில், முதல், 20 பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள் தேர்வாகின. அதில், இந்தப் பள்ளி மாணவர்களின் செயல்பாடும், ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டுக்கான போட்டிக்கு, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.


நிம்மதியான வாழ்க்கை:


பள்ளி தலைமை ஆசிரியர், அனிதா டேனியல் கூறுகையில், ''மாணவர்களின் ஆலோசனைப்படி, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம் வகுக்கப்பட்டது. மாணவர்களே கள ஆய்வு செய்து, பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்தனர். கள ஆய்வுக்கு செல்லும் போது, பள்ளியின் சீருடை, அடையாள அட்டை கட்டாயம் இருக்க வேண்டும் என,உத்தரவிட்டேன். மற்ற செய்திகளை மாணவர்களிடமே கேளுங்கள்,'' என்றார்.

இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது:பெரம்பூர், அயனாவரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், மாலை நேரங்களில் பிச்சைக்காரர்களை தேடி அலைந்தோம். அதில், 13 பேரை தேர்ந்தெடுத்தோம்.அவர்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணித்தோம். சிலர், போதை மற்றும் பிற தீய பழக்கங்களுக்கு அடிமையானோராக இருந்தனர். அவர்களில், சூழல் காரணமாக பிச்சை எடுக்கும், நான்கு பேரை தேர்ந்தெடுத்தோம். பெரம்பூரில் உள்ள நாகர், சிவகாமி, அண்ணாநகரில் உள்ள, யமுனா, சந்தான கிருஷ்ணன் ஆகியோர் தேர்வாகினர்.எங்களால் முடிந்த அளவு, சிறுதொகையை அளித்து, நால்வருக்கும் சிறிய கடை வைத்து கொடுத்துள்ளோம். இப்போது அவர்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். இருப்பினும், அவர்களை நாங்கள் ரகசியமாகவே கண்காணித்து வருகிறோம்.எங்களின் செயல்பாடுகளை அறிந்த மேயர், அவர்களின் மறுவாழ்வுக்கு, மாநகராட்சி சார்பில், 20 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.ஒருவரின் வாழ்க்கை, எங்களால் மாற்றம் அடைகிறது என்றால், அதை விட வேறு என்ன பெரிதாக ஜெயித்து விடப்போகிறோம், இந்த வாழ்க்கையில்?இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement