Ad Code

Responsive Advertisement

இது இறுதி தீர்ப்பு அல்ல: ஜெயலலிதா சட்டத்தின் துணையோடு வெகுவிரைவில் தமிழ்நாடு வருவார் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

இது இறுதி தீர்ப்பு அல்ல. ஜெயலலிதா சட்டத்தின் துணையோடு வெகுவிரைவில் தமிழ்நாடு வருவார் என்று ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டை ஆளுவார்
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொருளாளரும், முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சட்டத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் அபார நம்பிக்கை கொண்டுள்ளவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா. காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளை சட்டப்போரின் மூலம் சாதித்துக் காட்டிய ஜெயலலிதா, தனக்கு ஏற்பட்டுள்ள தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து மீண்டும் ஜொலிப்பார்கள். மிளிருவார்கள், தமிழ்நாட்டை ஆளுவார்கள் என்பதில் எள்ளளவும் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை.

பொய் குற்றச்சாட்டுகள்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தற்போது தமிழ்நாட்டில் இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஜெயலலிதாவின் பாதையில் நடைபெறும் அ.தி.மு.க.வுக்கு அவப்பெயரும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன.

தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், அ.தி.மு.க. அரசின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசின் மீது சட்டம்–ஒழுங்கு குறித்து பொய்க்குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

இத்தகைய குற்றச்சாட்டுக்கு எள் முனையளவும் இடம் கொடுக்காத வகையில் அ.தி.மு.க.வினர் நடந்துகொள்ள வேண்டும் என இந்த தருணத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதி தீர்ப்பு அல்ல
எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியினை, ‘‘சட்டத்தின் ஆட்சி’’ என்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள ஜெயலலிதாவின் வழியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு நிச்சயம் முறியடிக்கும். தற்போது, ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இறுதித்தீர்ப்பு அல்ல.

தனது வாதத்திறமையால், உறுதிகொண்ட நெஞ்சினால், நேர்மைக் குணத்தால் தமிழக நலன்களுக்காக பல வழக்குகளில் ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த வழக்கிலும் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

போராட வேண்டாம்
ஜெயலலிதா சட்டத்தின் துணையோடு வெகு விரைவில் தமிழகம் வருவார். எனவே, எவ்வித போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என்று ஜெயலலிதா மீது உயிரையே வைத்துள்ள, எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement