Ad Code

Responsive Advertisement

பள்ளி மாணவர்களிடம் 'டிஸ்லெக்சியா' கற்றல் குறைபாடு? விழிப்புணர்வும், பயிற்று மையங்களும் தேவை

 டிஸ்லெக்சியா' எனும் கற்றல் குறைபாடு, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் உள்ளதா என்பதை கண்டறிந்து, அவர்களுக்கு தனிப்பயிற்சி அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால், மூளையின் ஒரு பகுதி செயல்படாமல் இருப்பதால், கற்றல் குறைபாடு ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் உள்ள குழந்தைகளால், எழுத்துகளை ஒன்றுகூட்டி படிக்க முடியாது. அவர்களுக்கு எழுத்து வரிசை மாறித்தெரியும். படிப்பில் கவனம் செலுத்துவதில் பிரச்னை இருக்கும். ஆனால், மற்ற திறன்கள் இயல்பாகவே இருக்கும். இந்த குறைபாடு, குழந்தைகளிடம் உள்ளதா என்பது குறித்து, ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம், போதிய விழிப்புணர்வு இல்லை என, கற்றல் குறைபாடு குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் தனியார் அமைப்பினர் கூறுகின்றனர். இந்த குறைபாடுள்ள மாணவ, மாணவியருக்கு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு இறுதி தேர்வுகளில், கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மேலும், இளநிலை படித்த ஆசிரியர் ஒருவரை வைத்து தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகம் முழுவதும், கடந்த ஆண்டு, 310 பேர் வரை, இந்த சலுகையை பயன்படுத்தி உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர், தனியார் பள்ளி மாணவர்கள். இந்த குறைபாடு குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லாததால், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், இந்த சலுகையை பயன்படுத்துவதில்லை என, கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''2014ம் ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில், தேர்வு எழுதியோரில் ஒருவருக்கும், 'டிஸ்லெக்சியா' பாதிப்பிற்கு தரப்படும் தேர்வு சலுகை அளிக்கப்படவில்லை. மருத்துவ சான்றிதழுடன் எந்த கோரிக்கையும் வரவில்லை,'' என்றார்.

இதுகுறித்து, 'மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விலாசினி திவாகர் கூறியதாவது: 'இந்த குறைபாட்டை, குழந்தைகளிடம் துவக்கத்திலேயே கண்டறிந்து விட்டால், அவர்களுக்கு பார்த்தல், கேட்டல் உள்ளிட்ட செயல்கள் மூலமாக பயிற்சி அளித்து, புரிந்து கொள்ளும் திறனை அதிகரித்து, குறைபாட்டை போக்க முடியும்.இதுகறித்து, பெற்றோரிடமும், அரசிடமும் போதிய விழிப்புணர்வு இல்லை. ஐரேப்பிய நாடுகளில், சாரசரியாக, 10 சதவீத குழந்தைகளிடம் இந்த பாதிப்பு உள்ளது.இந்தியாவில் இதற்கான ஆய்வே மேற்கொள்ளப்படவில்லை. இந்த குழந்தைகள், எப்படி புரிந்து கொள்கின்றனரோ அப்படி பயிற்றுவிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு தெரிந்த முறையில், குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க கூடாது. இதுகுறித்து அரசு பள்ளிகளில் விழிப்புணர்வும், பயிற்றுவிக்கும் மையங்களும் தேவை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு பள்ளியில் என்ன பிரச்னை?
இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இளநிலை ஆசிரியர் ஒருவரை நியமித்து தேர்வு எழுத அனுமதிப்பதால், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள, மருத்துவ கழகம் ஒப்புதல் அளித்தால் தான், தேர்வில் விதிவிலக்கு அளிக்க முடியும். தனியார் பள்ளி மாணவர்கள் விஷயத்தில், அவர்களின் பெற்றோர் வீடுகளில், குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் போது, இந்த குறைபாடு தெரியவருகிறது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 9ம் வகுப்பு வரை, ஒட்டுமொத்த தேர்ச்சி செய்யப்படுகின்றனர். பெற்றோரும் தனி கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால், அரசு பள்ளி மாணவர்களிடம், இந்த குறைபாட்டை கண்டுபிடிக்க முடிவதில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement