Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சித் திட்டம்: விரைவில் அறிமுகம்

பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புப் பயிற்சிகள் அளிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையரும், பேரிடர் மேலாண்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளருமான டி.எஸ். ஸ்ரீதர் கூறினார்.

"கட்டட, போக்குவரத்துப் பேரிடர்களால் ஏற்படும் தொழில்நுட்ப, சமூக சட்ட விவகாரங்கள்' என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கு சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் டி.எஸ். ஸ்ரீதர் பேசியது: சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, வாகனப் பெருக்கமும் அதிகரித்து வருகிறது. அதே நேரம், வாகனங்களின் சராசரி வேகமும் இப்போது அதிகரித்து விட்டது. கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் சாதாரணமாக 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் நகரங்களுக்குள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் போக்குவரத்து கட்டமைப்புகளோ, பாதுகாப்பு நடைமுறைகளோ இன்னும் மேம்படவில்லை. சாலைப் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வும் மக்களிடையே பெரிய அளவில் எழவில்லை. எனவேதான் சாலை விபத்துகள், ரயில் விபத்துகள் போன்ற போக்குவரத்துப் பேரிடர்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இதுதவிர இயற்கைப் பேரிடர்களாலும் பெரும் பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். இதுபோன்ற பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக மக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்குப் பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புப் பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, பேரிடர் மேலாண்மை, புனரமைப்புத் துறையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அக்டோபர் மாதத்திலேயே அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக, இந்தத் திட்டம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் பேரிடர்களால் ஏற்படும் இழப்பை குறைக்க முடியும் என்றார்.

கருத்தரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் பி. வணங்காமுடி, பேராசிரியர்கள் டி. கோபால், ஏ. ரகுநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement