இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு 85 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதார, சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்காகத் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு ஆகிய அறிமுக வகுப்புகளில் 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் இந்த 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 1.20 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2013-14 ஆம் கல்வியாண்டில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்பாக அதிகாரிகள் கூறியது: இந்த ஆண்டு (2014-15) 85 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கட்டணமாக மத்திய அரசிடமிருந்து ரூ.40 கோடி கோரப்பட்டுள்ளது. இந்தத் தொகை கிடைத்தவுடன் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும்.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணம் ரூ.25 கோடி வழங்கப்பட வேண்டும். இந்தக் கட்டணமும் மத்திய அரசிடமிருந்து பெற்று வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.