Ad Code

Responsive Advertisement

'சக்சஸ்' தந்த ஆசிரியர் ராஜரத்தினம்! அக்.,5 சர்வதேச ஆசிரியர் தினம்

என்னை சர்வதேச அளவில் புகழ் பெறவைத்த ஆசிரியர் ராஜரத்தினத்தையும், அவரைப் போன்ற எண்ணற்ற ஆசிரியர்களையும் நினைவு கொள்வதில் பெருமையடைகிறேன். ராஜரத்தினம் ஓர் பள்ளி ஆசிரியர் அல்ல. என்னைப் போன்ற படிப்பில் பின்தங்கியவர்களுக்காகவே டியூசன் சென்டர் நடத்தி அறிவை மட்டுமல்ல ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்த உயரிய மனிதர்.

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பயந்து கொண்டிருந்த போது, சகமாணவர் துரைராஜ் சொல் கேட்டு, அவரிடம் அதிகாலை, மாலை, இரவு என டியூஷன் சென்றதும், தேர்வில் அதிக மார்க் அவர் பெறவைத்ததும் வாழ்நாளில் மறக்கமுடியாதது. துாய மரியன்னை பள்ளியின் நுாற்றாண்டு விழாவில் சிவப்பு கம்பளம் விரித்து, ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் முன் என்னை பாராட்டி, 'மனித நேயமிகு முன்னாள் சிறந்த மாணவர்' என்ற விருதினை அளித்து கவுரவித்தார். நான் வாங்கிய நுாற்றுக்கணக்கான விருதுகளில் இந்த விருதைதான் மிக கவுரவமாக கருதுகிறேன். படிப்பில் மட்டுமின்றி, சேவைகளிலும் என் வழியை மாற்றிவிட்ட ராஜரத்தினம் அவர்களுக்கே இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

'சக்சஸ்' படிப்பு:

படிப்பில் பின்தங்கிய என்னை போன்றோரை அவர் எப்படி மாற்றினார்? அதிகாலை 5 மணிக்கு அவரிடம் இருக்க வேண்டும். புத்துணர்ச்சியோடு உள்ள மூளைக்கு அவர் கொடுக்கும் அறிவு, அவர் அளிக்கும் முறை எண்ணற்றோரை சர்வதேச அளவில் புகழ்பெற வைத்து விட்டது. அப்படி என்ன தான் கற்றுக் கொடுக்கும் முறை அவரிடம்? கையில் பிரம்பு இருக்கும். அடிக்க மாட்டார். எழுதி, எழுதி பார்க்க வேண்டும். அதை நாமே திருத்த வேண்டும். இது தான் அவர் கற்பித்த 'சக்சஸ்' முறை. மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுப்பது சரியல்ல என்பார். எழுதி, எழுதி பார்க்கும் போது, மறக்காமல் மனதிற்குள் ஏறும். எழுத்து பிழைகளை நாம் திருத்திக் கொள்ளலாம். கடைசி நிமிடம் வரை தேர்வு எழுதாதே. கடைசி 15 நிமிடம் எழுதியதை சரிபார்த்து நீயே பிழைகளை திருத்திவிடு. மதிப்பெண் அள்ளலாம், என்பார். இது நுாறு சதவீத வெற்றியை கொடுத்தது.
ஓர் சாதாரண நான்கு முழ வேட்டி, சட்டையில் அவரைப் பார்த்தால் அதிகம் படித்தவர் என்று யாரும் கூறமாட்டார்கள். அவரை நாங்கள் 'சார்' என்று அழைத்ததே இல்லை. 'அண்ணன்' என்று தான் அழைப்போம். எல்லோரையும் ஏணியில் ஏற்றி விட்டு கடைசி வரை அவர் ஓர் சாதாரண மனிதராக தியாக செம்மலாகவே இறந்தார். அவர் ஏற்றிவிட்ட நான், டாக்டரான பின் நான் படித்த டியூசன் சென்டருக்கே, சிறப்பு விருந்தினராக சென்றது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பெருமைமிகு நிகழ்வு. சர்வதேச அளவில் எண்ணற்ற ராஜரத்தினங்கள், லட்சக்கணக்கானோரை உயர்த்திவிட்டிருக்கிறார்கள். உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச ஆசிரியர் தினமான இன்று இது போன்று ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பொற்பாதங்கள் தொட்டு வணங்குவதோடு, அவர்களும் எங்களைப் போல் எல்லா வகைகளிலும் உயர்ந்து, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நடத்த வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement