Ad Code

Responsive Advertisement

கல்வித்துறையில் 4,500 பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நேரடி நியமனம்

பள்ளி கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர், 4,500 பேர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பல லட்சம் பேர் காத்திருப்பதால், இந்த வேலைக்கு கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் பாட செய்முறைக்காக, ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில், உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில், 4,500 உதவியாளர்கள், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கல்வித்துறை:

இதேபோல், பள்ளி துப்புரவாளர் பணியிடமும், கணிசமான எண்ணிக்கையில் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அரசாணை, ஓரிரு நாளில் வெளியாகும் என்றும், கல்வித்துறை வட்டாரம் கூறுகிறது.

இதுகுறித்து, அந்த வட்டாரம், மேலும் கூறியதாவது: ஆய்வக உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு, அடிப்படை கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு வரை எனில், 35 வயதிற்குள் இருக்க வேண்டும்; அதிக கல்வித்தகுதி எனில், வயது வரம்பு கிடையாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, பதிவு மூப்பு பட்டியல் பெற்று, சான்றிதழ் சரிபார்க்கப்படும். பின், மாவட்ட அளவிலான குழு, நேர்முகத் தேர்வு நடத்தி, குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கும். இது குறித்த, விரிவான வழிகாட்டுதல் அரசாணை, ஓரிரு நாளில் வெளியாகும். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

கடும் போட்டி:

ஆய்வக உதவியாளர் பணிக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கலாம் என்பதால், இந்த பணிக்கு, கடும் போட்டி ஏற்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை, 50 லட்சத்திற்கும் மேல் உள்ளது. ஆய்வக உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதி, 10ம் வகுப்பு என்பதால், கிட்டத்தட்ட பதிவு செய்தோர் அனைவ ருமே போட்டியில் இருப்பர். பதிவு மூப்பு அடிப்படையில் பார்த்தாலும், இந்த பணியைப் பெற பல லட்சம் பேர் தகுதி உள்ளவர்களாக இருப்பர். எனவே, அவர்கள் அனைவரும் இந்த பணியைப்பெற கடும் முயற்சியை மேற்கொள்வர் என தெரிகிறது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement