Ad Code

Responsive Advertisement

நடனமாடி திருக்குறள் கற்பிக்கும் ஆசிரியர்

மொடக்குறிச்சி அருகே, நாதகவுண்டன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடனமாடியபடியே திருக்குறளை பாடலாகப் பாடி மாணவ, மாணவிகளுக்கு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கற்பித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் புவனா தலைமை வகித்தார். மொடக்குறிச்சி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செலஸ்டி முன்னிலை வகித்தார். இடைநிலை ஆசிரியர் தாமஸ் ஆண்டனி வரவேற்றார்.

கரூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியர் சுந்தர மகாலிங்கம். இவர், நாதகவுண்டன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாணவ, மாணவிகளுக்கு நடனமாடியபடியே திருக்குறள் பாடத்தை கற்பித்தார். மேலும், குறள்களுக்கு நடனமாடி கற்பிக்கும் முறை குறித்தும் அவர் பயிற்சியளித்தார்.

இவர், கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் பாட்டுப் பாடியே தமிழ் வகுப்புகளை நடத்துவாராம். இதனால் பள்ளி மாணவ, மாணவியரிடையே தமிழ்ப் பாடங்கள் மீது மிகுந்த ஆர்வத்தை உண்டானதாகத் தெரிவித்தார்.

அவரது அனுபவங்கள் குறித்து கேட்டபோது, 18 ஆண்டுகளாக 1,661-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 7 பல்கலைக் கழகங்களுக்கும் சென்று பயிற்சி அளித்துள்ளதாகவும், தனது சிறு வயதிலேயே நடனம் கற்றுக்கொண்டதாகவும், பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றது முதல் மாணவ, மாணவிகளுக்கு நடனமாடி திருக்குறள் கற்பிக்கும் முறை குறித்து பயிற்சியளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக பள்ளியின் இடைநிலை ஆசிரியர் தாமஸ் ஆண்டனி, பொம்மலாட்டம் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை நடத்தினார். பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement