Ad Code

Responsive Advertisement

ஆசிரியருக்கும் அவரிடம் படித்த மாணவிக்கும் ஒரே நேரத்தில் நல்லாசிரியர் விருது

தேனியில், ஆசிரியருக்கும் அவரிடம் படித்து தற்போது தலைமை ஆசிரியையாக உள்ள அவரது முன்னாள் மாணவிக்கும் ஒரே நேரத்தில் நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

தேனி மாவட்டத்தில் 11 பேர் 'மாநில நல்லாசிரியர்' விருது பெற்றுள்ளனர். இதில் தேனி அருகே பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாங்கம், 56, விருது பெற்றுள்ளார். இவரிடம் படித்து தற்போது தேனி முத்துதேவன்பட்டி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ள சுதாமதிக்கும், 45, நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. தலைமை ஆசிரியர் ராஜாங்கம், போலியோவால் பாதிக்கப்பட்டவர். மன உறுதியுடன் படித்து, கணித பாடத்தில் முதுகலை ஆசிரியரானார். 1985 முதல் 2007 வரை தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தார். ஒரே காலில் நின்றபடி
பாடம் நடத்துவார். அந்த பள்ளியில் இவரிடம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர் சுதாமதி. இதுகுறித்து ராஜாங்கம் கூறுகையில், ''எனது சொந்த ஊர் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம். கஷ்டப்பட்டு படித்தேன். அதனால் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் நன்கு படிக்க
வேண்டும் என்று லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறேன். மாணவர்கள் தான் எனது சொத்தாக கருதுகிறேன். அரசுப் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத் தந்துள்ளேன். எனது மாணவியுடன் சேர்ந்து விருது பெறுவது எனக்கு பெருமை,'' என்றார்.

சுதாமதி கூறுகையில், ''ஒரு காலில் நின்று கொண்டு, அனைவருக்கும் எளிதாக புரியும்படி ஆர்வமுடன் பாடம் எடுப்பார். அனைத்து தரப்பு மாணவர்களும் நன்கு படிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்படுவார். அவருடன் சேர்ந்து நானும் விருது பெறுவது நெகழ்ச்சியாக
உள்ளது,”என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement