Ad Code

Responsive Advertisement

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு தடை நீக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் விரைவில் பணியில் சேர உள்ளனர் - தினத்தந்தி

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பணி நியமனத்துக்கு தடை

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த தனி நீதிபதி, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

அப்பீல்

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் அப்பீல் செய்தார். இந்த அப்பீல் மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, மதுரை ஐகோர்ட்டு கிளை சிறப்பு அரசு வக்கீல் சண்முகநாதன் ஆகியோர் கூறியதாவது:-

‘ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நடைமுறை சரியானது அல்ல என்று கூறி பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தனி நீதிபதி தடை விதித்தார். ஆசிரியர் பணிக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நடைமுறை சரியானது தான் என்று சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்துள்ள தடை ஏற்புடையது அல்ல. எனவே, அந்த தடையை நீக்க வேண்டும்.’

இவ்வாறு அரசு வக்கீல்கள் கூறினர்.

தடை நீக்கம்

மேலும், சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சு பிறப்பித்த உத்தரவு நகலையும் அவர்கள் நீதிபதிகளிடம் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கவுன்சிலிங்’ நடத்தப்பட்டு பலருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் பணி நியமனத்துக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்ததால் ‘கவுன்சிலிங்’ மூலம் பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் பணியில் சேர முடியாமல் இருந்தனர். தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் விரைவில் பணியில் சேர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement