Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை 100 சதவீதமாக அதிகரிக்க மாநகராட்சியின் ‘உண்டு–உறைவிட’ பள்ளிக்கூட மாணவர்களுக்கு தினமும் 2 வேளை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

‘உண்டு–உறைவிட’ பள்ளி 

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 32 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ–மாணவிகள் கல்வி பயின்று வருகின்றார்கள். மாநகராட்சி பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக தேர்ச்சி பெறும் மாணவ–மாணவிகளின் விழுக்காடு கணிசமாக அதிகரித்து வருகிறது.

தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் படிப்பு ஊக்க திறனை மேம்படுத்தும் வகையிலும் செனாய் நகர் சுப்பராயன் தெருவில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை ‘உண்டு–உறைவிட’ பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

மாணவ–மாணவிகள் ஆர்வம் 

வீடுகளில் குறைவான இடவசதி, படிப்பதற்கு போதிய வசதி, வாய்ப்புகள் இன்மை, குடும்ப சூழ்நிலை, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், தொந்தரவு காரணமாக வீடுகளில் தங்கியிருந்து படிப்பதை சுமையாக கருதும் மாணவ–மாணவிகள் பயன் அடைவதற்காக இப்பள்ளிகளை மாநகராட்சி முதல் முறையாக தொடங்கியுள்ளது.

‘உண்டு–உறைவிட’ பள்ளிகளில் மாணவ–மாணவிகளுக்கு சாப்பாடு, படுக்கை இடவசதி, படிப்பதற்கு மின் விளக்குகள், தங்கும் இடத்தில் கட்டில், மின்விசிறி உள்ளிட்ட படிப்பதற்கு உகந்த பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் படிப்பினை தொடர்ந்து வருகிறார்கள்.

பிளஸ் 2 பயிற்சி வகுப்பு 

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

‘உண்டு–உறைவிட’ பள்ளிகளில் பிளஸ் 1 மாணவ–மாணவிகள் 106 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு வழக்கமான பள்ளி நேரத்தில் பிளஸ் 1 பாடமும், காலை மற்றும் மாலை நேரத்தில் பிளஸ் 2 பாட வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று 100 சதவீத தேர்ச்சி பெறுவார்கள்.

‘உண்டு–உறைவிட’ பள்ளிகளுக்கு மாணவ–மாணவிகள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த வசதி, வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இதனால் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளின் கல்வித்தரம் மேம்படும்.

எல்.கே.ஜி.–யூ.கே.ஜி. 

இதேபோன்று மாநகராட்சி கட்டுப்பாட்டில் 65 எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5 ஆயிரம் சிறுவர், சிறுமியர் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் 6–ந் தேதி தொடங்குகிறது. எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகளில் சேரும் சிறுவர், சிறுமியருக்கு 3 ஜோடி இலவச சீருடை மற்றும் ஒரு ஜோடி ‘ஷூ’, ‘ஷாக்ஸ்’ ஆகியவை கல்வித்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement