Ad Code

Responsive Advertisement

கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் போதிப்பது அவசியம்

நல்ல சமுதாயம் உருவாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கங்களையும் போதிப்பது அவசியம் என்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வலியுறுத்தினார்.
நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவுக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பேசியது:

தமிழகத்தை 2023-ஆம் ஆண்டுக்குள் கல்வி, சமூக, பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக உயர்த்திட தமிழக அரசு, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்- 2023 என்ற இலக்கு நிர்ணயித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

நாட்டிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், கல்விக்காக ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கல்வித் துறையில் பல மாற்றங்களையும் செய்ததன் விளைவாக தமிழக மாணவர்களின் கல்வித் திறன், தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

கல்வி வளர்ச்சியில் அரசின் இத்தகைய முயற்சிகளுக்குத் தனியார் பள்ளிகளும் தோள் கொடுக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு லாரி, கோழி முட்டை, துணி உற்பத்தியில் மட்டுமே புகழ் பெற்ற நாமக்கல் மாவட்டத்துக்கு "கல்வி மாவட்டம்' என்ற பெருமை கிடைக்க தனியார் பள்ளிகளே முக்கியக் காரணமாகும். அத்தகைய கல்விக்கூடங்களுக்கு முன்னோடியாக நாமக்கல் டிரினிடி பள்ளி விளங்குகிறது.

பிள்ளைகளைப் பெற்றோர்கள் படிக்க வைத்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும். பல்வேறு காரணங்களால் இளைய சமுதாயத்தினரின் கவனம் சிதறி இறுதியில் அவர்கள் ஒழுக்கமற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவற்றைப் போக்கி மாணவர்களை நற்குணங்கள் நிறைந்தவர்களாக உருவாக்க பள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சிந்தனைத் திறனையும், நற்பண்புகளையும் வளர்த்து ஒவ்வொருவரையும் சொந்தக் காலில் நிற்கவைப்பதாக கல்வி இருக்க வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். இதைச் செயல்படுத்த பள்ளிகள் கல்வியை மட்டுமன்றி நல்லொழுக்கங்களையும் போதிக்க வேண்டும் என்றார் அவர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement