Ad Code

Responsive Advertisement

டூவீலர்களில் "பறக்கும்' மாணவ, மாணவியர் : காற்றில் பறந்தது, கல்வித்துறை சுற்றறிக்கை : வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து போலீஸ்

பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் டூவீலர் ஓட்டி வரக்கூடாது என்ற பள்ளி கல்வித் துறையின் உத்தரவு, திருப்பூரில் அப்பட்டமாக மீறப்படுகிறது. போக்குவரத்து விதி முறையை மீறி, ஏராளமான மாணவ, மாணவியர், டூவீலர்களில் வந்து செல்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய, பள்ளி நிர்வாகங்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

விடலை பருவத்தில் உள்ள மாணவ, மாணவியர், "இளம்கன்று பயம் அறியாது' என்ற பழமொழிக்கு ஏற்ப எதிலும், வேகத்தையும், வீரத்தையும் காட்ட விரும்புகின்றனர். டூவீலர் ஓட்டும்போது, கட்டுப்பாடில்லாத அதிவேகத்தில் செல்வதும், குறுகலான சந்துகளில் முரட்டு வேகத்தில் வாகனம் ஓட்டுவதை, பெரிய சவாலாக கருதுகின்றனர். "டீன் - ஏஜ்' வயதுக்கு உரிய அறியாமை, ஆர்வக்கோளாறில், மாணவ, மாணவியர் பாதுகாப்பின்றி, டூவீலர் ஓட்டுவது, சில நேரங்களில் விபத்தாக மாறுகிறது; <<உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. பிள்ளைகள் மீது கொண்ட அதீத பாசத்தாலும், அவர்களது வற்புறுத்தலாலும் சில பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு
டூவீலர் வாங்கி தருகின்றனர். 18 வயது பூர்த்தியடைந்து, ஓட்டுனர் உரிமம் பெற்ற பின்பே வாகனம் இயக்க வேண்டும் என்ற மோட்டார் வாகன சட்டம், மாணவர்களை பொருத்தவரை, காற்றில் பறக்கிறது. சீருடையில் வாகனம் ஓட்டி வரும் மாணவ, மாணவியரை, போலீசாரோ, வட்டார போக்குவரத்து அலுவலர்களோ கண்டுகொள்வதில்லை. பெரும்பாலான மாணவ, மாணவியர், ஹெல்மெட் அணிவதில்லை. தங்களது நண்பர்களையும் ஏற்றிக்கொண்டு, டூவீலர்களில் பறக்கின்றனர். திருப்பூர் குமரன் ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு, பி.என்., ரோடு, அவிநாசி ரோடு <உள்ளிட்ட பிரதான ரோடுகளில், போக்குவரத்தான பகுதிகளிலும் மாணவர் களின் டூவீலர்கள் மின்னல் வேகத்தில் செல்கின்றன. அவர்கள், வளைந்து, நெளிந்து செல்லும் வேகம், ரோட்டில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளை பதைபதைக்கச் செய்கிறது. சில மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு, டூவீலர்களில் பாய்வது, மற்றவர்களை பீதியடைய வைக்கிறது.
"பள்ளிக்கு மாணவ, மாணவியர் டூவீலர் ஓட்டி வர அனுமதிக்கக் கூடாது; 18 வயது நிறைவடையாமல், ஓட்டுனர் உரிமம் பெறாமல் பள்ளிக்கு மாணவர் டூவீலர் ஓட்டி வரும் பட்சத்தில், சாவியை பெற்றுக்கொண்டு, பெற்றோரை வரவழைத்து, அவர்களிடம் வாகனத்தை தலைமை ஆசிரியர் ஒப்படைக்க வேண்டும். இதில், அலட்சியம் காட்டி, மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில், தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும்,' என, பள்ளி கல்வித்துறை தரப்பில், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையை, பள்ளி நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் உள்ளன. சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பியதோடு, கடமை முடிந்து விட்டது என கல்வி அதி காரிகள் அக்கறை காட்டாமல் உள்ளனர். முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் கேட்டபோது,""இதுதொடர்பாக, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும்; எந்தெந்த பள்ளிகளில், டூவீலர்களில் மாணவ, மாணவியர் வருகின்றனர் என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசுவிடம் கேட்ட போது, ""சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், பள்ளிகளில் சாலை பாதுகாப்பு படை ஏற்படுத்தப்படுகிறது. வாகனம் ஓட்டும்போது, யாராக இருந்தாலும் உயிர் பாதுகாப்பு என்பது மிக முக்கியம். சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதி முறையை மீறுவது சட்டப்படி குற்றம். விதிமுறை மீறுவோர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement