Ad Code

Responsive Advertisement

7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமணி



தொடக்கக் கல்வித் துறைக்காக 1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 500 பேரிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடக்கக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளில் மொத்தமாக இந்த ஆண்டு 2,582 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

இதில் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள 1,649 காலிப்பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் மட்டும் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

ஆதிதிராவிடர் நலத் துறை உள்ளிட்ட பிற துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளுக்காக 900-த்துக்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் வரும் வியாழக்கிழமை அல்லது திங்கள்கிழமை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு சுமார் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் ஆசிரியர்களிலிருந்து சுமார் 11 ஆயிரம் பேர் தகுதிகாண் மதிப்பெண் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 500 பேரிலிருந்து 1,649 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஆங்கிலம், கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆக.28) வழங்குகிறார்.

இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக நியமிக்கப்படுகின்றனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இரண்டு பாடங்களுக்கான ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களில் சில துறைகளுக்கான ஆசிரியர்கள் தவிர 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வைத் தொடங்கி வைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் 7 பேருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்குகிறார்.

பணி நியமனக் கலந்தாய்வு எப்போது?

இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பெரும்பாலும் அடுத்த வாரத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. இந்தப் பணி நியமனக் கலந்தாய்வு தேதிகள் ஓரிரு நாளில் இறுதிசெய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement