Ad Code

Responsive Advertisement

சிசாட்-2 தேர்வுத் தகுதிக்கு ஆங்கில மதிப்பெண்கள் சேர்க்கப்பட மாட்டாது: மத்திய அரசு

யு.பி.எஸ்.சி தேர்வு விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக சிசாட் இரண்டாம் நிலைத் தேர்வில் ஆங்கில மதிப்பெண்கள் தகுதிக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


இது குறித்து மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது, “சிவில் சர்விசஸ் முதற்கட்ட தேர்வு- பேப்பர் 2-ல் 'ஆங்கில மொழி புரிதல் திறன்கள்' என்ற கேள்விப் பகுதியில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் தகுதிக்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என்று மத்திய அரசு கருதுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

     மேலும், "2011ஆம் ஆண்டு சிவில் சர்விசஸ் தேர்வு எழுதியவர்களுக்கு 2015ஆம் ஆண்டுத் தேர்வில் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்" என்று அவர் உறுதியளித்தார்.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் பல அமளிகளைச் சந்தித்து வந்தது. சிசாட் தேர்வுகளில் கிராமப்புறங்களிலிருந்து வந்து எழுதும் மாணவர்களுக்கு தற்போதைய நடைமுறை போதிய வாய்ப்புகளை வழங்குவதில்லை என்றும் ஆங்கிலம், இந்தி மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பணித் தேர்வுகள் நடைபெறுவதாகவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்நிலைத் தேர்வுகளில் சிசாட் 1 மற்றும் சிசாட் 2 ஆகியவற்றில் தலா 200 மதிப்பெண்களைக் கொண்ட இரண்டு வினாத்தாள்களில் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களால் மட்டுமே எழுதக் கூடிய வகையில் மிகவும் கடினமாக இருக்கிறது என்று மாணவர்கள் கருதுகின்றனர்.

இதில் ஆங்கிலம் தெரிந்த மாணவர்கள் திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்தகட்டத்திற்கு முன்னேறிவிடுகின்றனர். ஆங்கிலம் தெரியாத, பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட கிராமப்புற மாணவர்கள் முதல்நிலைத் தேர்விலேயே தோல்வியடைந்து விடுகின்றனர்.

இதனால் ஆங்கிலத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளும் அமளையில் ஈடுபட்டன.

இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது சிசாட் 2-ல் ஆங்கில திறனறி குறித்த வினாக்களுக்கான மதிப்பெண்கள் தகுதிக்கான அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement