Ad Code

Responsive Advertisement

மின்னணு சேவைகளை பயன்படுத்துவதில் தமிழகம் மூன்றாமிடம்: கடந்த ஆண்டை விட 10 இடங்கள் முன்னேறியது

தேசிய அளவில், அரசு சேவைகளை கணினி மூலம் பெறும் மாநிலங்களில், கடந்த ஆண்டு, 12வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு, மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 
மத்திய அரசின், மின்னணு பரிமாற்றங்களை ஆய்வு செய்யும், 'இ தால்' புள்ளி விவரங்கள், இதை தெளிவுபடுத்தியுள்ளது.குறிப்பாக, தமிழக சுகாதாரத்துறை, கல்வித்துறை ஆகியவை, இப்பிரிவில், அபரிமிதமான வளர்ச்சி பெற்றுள்ளன.தொழில் நுட்ப வளர்ச்சியால், மக்கள் இருந்த இடத்தில் இருந்தே, அரசின் பல்வேறு சேவைகளை பெற முடியும்.குறிப்பாக, கட்டணங்கள் செலுத்துதல், பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் போன்றவை, கணினி வாயிலாக, சம்பந்தப்பட்ட துறையின், இணையதளங்களில் கிடைக்கப் பெறுகின்றன.போக்குவரத்து, சுகாதாரம், கட்டணங்கள் செலுத்துதல், தேர்தல், போலீஸ், வருவாய் உட்பட, 28 துறைகளில் இருந்து சேவைகள், கணினி வாயிலாக பெறப்படுகின்றன.இந்த வகையில், இந்த ஆண்டு ஜனவரி முதல், ஆக., 20ம் தேதி, பகல், 2:30 மணி வரை, 178 கோடி முறை, இந்தியா முழுவதும், மத்திய, மாநில அரசுகளின் மின்னணு சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், 20 நாட்களில், 10.61 கோடி முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மின்னணு சேவை பயன்படுத்துவதில், கடந்த ஆண்டு போலவே, மாநில அளவில், முதல் இடத்தில், குஜராத் (42.09 கோடி); இரண்டாவது இடத்தில், மத்திய பிரதேசம் (28.73 கோடி) உள்ளன.ஆனால், கடந்த ஆண்டு, 13ம் இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு, 10 இடங்கள் முன்னேறி, மூன்றாம் இடத்தை (14 கோடி) பிடித்துள்ளது.அடுத்தடுத்த இடங்களை, ஆந்திரா (9.17 கோடி); உத்தர பிரதேசம் (6.22 கோடி); மகாராஷ்டிரா (5.04 கோடி); பஞ்சாப்(4.52 கோடி) மாநிலங்கள் பிடித்துள்ளன.கடந்த ஆண்டு, தமிழகத்தில், 1.15 கோடி முறை, மின்னணு சேவை பயன்படுத்தப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக, தேசிய அளவில் பயன்படுத்தப்பட்ட, 28 சேவை பிரிவுகளில், 12 பிரிவுகளை மட்டுமே தமிழக மக்கள் பயன்படுத்தினர்.அப்போது, போக்குவரத்து துறையின் சேவைகளை, 55.19 லட்சம் பேர்; வணிகவரித்துறை சேவைகளை, 51.23 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர். கட்டணம் செலுத்தும் சேவையை கடந்த ஆண்டில், மூவர் மட்டுமே பயன்படுத்தி இருந்தனர்.ஆனால், இந்த ஆண்டில், நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 

தமிழகத்தில், சுகாதாரத்துறை (5.54 கோடி) முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களை, கல்வித்துறை (4.82 கோடி); கட்டணம் செலுத்தும் சேவை (1.19 கோடி); வணிகவரித்துறை(94 லட்சம்) என, சேவைகளை பயன்படுத்தியுள்ளனர்.இதில், சுகாதாரத்துறையின் சேவைகளை, மக்கள் அதிகளவில் பயன்படுத்தியுள்ளதற்கு, தமிழக அரசு, பல்வேறு தகவல் தொகுப்புகளை, மின்னணு பயன்பாட்டிற்கு கொண்டுவந்ததே காரணமாக கூறப்படுகிறது.குறிப்பாக, சுகாதாரத்துறையில், மருத்துவமனை மேலாண்மை திட்டத்தின் கீழ், 2.12 கோடி நோயாளிகள், 1.30 கோடி புற நோயாளிகள், 1.08 கோடி மருந்தகம் தொடர்பான விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த இடத்தில் உள்ள, கல்வித்துறையில், ஆன்லைன் வாயிலாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, 3.35 கோடி பேர் பார்த்துள்ளனர்.கட்டணம் செலுத்தும் சேவையில், அதிகபட்சமாக, மின்சார கட்டணம் செலுத்தும் சேவையை, 1.19 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர்.

சுகாதாரத் துறை சாதித்தது எப்படி?

சுகாதாரத் துறையில் மின்னணு பயன்பாடு அதிகரித்துள்ளது குறித்து, அத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் விவரம் பதிவு, பிறப்பு பதிவு உள்ளிட்டவை கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மேலும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான தொற்றா நோய்கள் குறித்த பரிசோதனை மற்றும் கண்காணிப்பு தொடர் சிகிச்சை விவரங்கள், குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில், நோயாளிகள் வருகை முதல், மருந்து கொடுப்பது வரையிலான அனைத்து விவரங்களின் பதிவுகளும், கணினி மூலம் நடந்து வருகின்றன.மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதால், கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை மற்றும் தொடர்பான விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, அந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு மருத்துவமனைகளில் செயல்படும் மருந்தகங்களில் மருந்து இருப்பு, வினியோகம் குறித்த அனைத்து தகவல்களும் கணினியில் பதிவு செய்யப்படுகின்றன.மருத்துவமனை மேலாண்மை திட்டத்தின் கீழ், அனைத்து மருத்துவமனைகள், மருந்தகங்கள், உள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுகளின் அன்றாட நிகழ்வுகள் அனைத்துமே, கணினியில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வருங்காலத்தில், இந்த திட்டம் இன்னும் மேம்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement