Ad Code

Responsive Advertisement

TRB - விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்

போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது.


அதிக வேலை பளு:

டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தற்போது அமலில் உள்ளது. இந்த முறை, டி.ஆர்.பி.,க்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும், லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதனால், லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்து, மாநிலம் முழுவதும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது.

இணையதளம்:

இந்நிலையை மாற்றி, எளிமையான முறையில், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது, டி.ஆர்.பி., தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இணைய தளம் வழியாக, விண்ணப்பதாரர், எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதனால், கட்டணமும், வெகுமாக குறையும். விண்ணப்ப கட்டணம், 500 ரூபாயாக உள்ளது. இதுவே, இணையதள முறைக்கு மாறினால், பதிவு கட்டணமாக, மிக குறைந்த தொகையை வசூலிக்க, வாய்ப்பு ஏற்படும்.

கால அவகாசம்:

மேலும், விண்ணப்பதாரர்களுக்கு, போதிய கால அவகாசம் கொடுத்து, இணையதள பதிவில் உள்ள தவறுகளை சரி செய்யவும், டி.ஆர்.பி., வாய்ப்பு கொடுக்கும். இதுபோன்று, பல வசதிகள் இருப்பதால், அரசு பொறியியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது ஆய்வு நடந்து வருகிறது. அரசு பொறியியல் கல்லூரிகளில், 139 உதவி பேராசிரியரை நியமனம் செய்ய, அக்டோபர், 26ம் தேதி, போட்டி தேர்வு நடக்கும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கு, ஆகஸ்ட், 20ம் தேதி முதல் செப்டம்பர், 5ம் தேதி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள்...:

இதற்கு, 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. எனவே, இந்த தேர்வில் இருந்து, இணையதள பதிவு முறையை, டி.ஆர்.பி., அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப முறையா; இணையதள பதிவு முறையா என்பது, இம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement