Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் மீது பெற்றோர்களுக்கு தேவை... : மொபைல் போனால் தடம் மாறும் அவலம்

பள்ளி படிப்பு காலங்களில் ஏற்படும் கூடா நட்பின் காரணமாக கொலையில் முடியும் அளவிற்கு மாணவ, மாணவியர்களின் வாழ்க்கை, தடம் மாறியுள்ளதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து 6 வாரங்களாகி விட்டன. தேர்ச்சி பெற்று புதிய வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் மாணவ, மாணவியர்கள் படிப்பில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். வகுப்பில் பின் தங்கிய நிலையில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் சிலர் மொபைல் போன் மூலம் கூடா நட்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

இவர்கள், படிப்பில் தேற வேண்டும் என்பதற்காக, பெற்றோர்கள் அலைந்து திரிந்து பணம் செலவழித்து ஆசிரியர்களிடம் மன்றாடி "டியூஷன்' சேர்த்து விடுகின்றனர். ஆனால் "டியூஷனு'க்குச் செல்வதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு ஊர் சுற்ற துவங்கி விடுகின்றனர். பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவியர்கள் பேசி பொழுதைக் கழிப்பதில் அவ்வளவு சுதந்திரம் கிடைப்பதில்லை. ஆனால் "டியூஷன்' என்ற போர்வையில் முன்னதாகவே வந்து சுதந்திரமாக ஊர் சுற்ற வசதியாக உள்ளது. இதன் விளைவாக இளம் வயது காதல் பல்வேறு பிரச்னைகளை உருவாக்குகிறது.
இந்த விவகாரம் நட்பு வட்டாரங்களில் பெரும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. இதனால் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலேயே அடிக்கடி மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வருகிறது. இது போன்ற பிரச்னைகளால்தான் தனியார் கல்லூரியில் படித்த மாணவி மகாலட்சுமி கல்லூரி வாசலில், காதலனால் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அதே கல்லூரியில் படித்த மாணவர் ராம்குமார் கூடா நட்பின் காரணமாக மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தார்.
அதேப்போன்று மாணவர் சரண் சந்தேகத்திற்கிடமான முறையில் ரயில் பாதையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். கிள்ளை எம்.ஜி.ஆர்., திட்டில் அரசு பள்ளி மாணவி கவுசல்யா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இப்படி மாணவ பருவத்திலேயே காதல் விவகாரங்களால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடலூரில் பள்ளி நடைபெறும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் ஆசிரியரிடம் "டியூஷன்' செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சுப்ராயலு ரெட்டியார் பூங்காவிலும், சில்வர் பீச்சிலும் நேரத்தைக் கழிக்கும் மாணவ, மாணவியர்களை போலீசார் விசாரித்து விரட்டியடித்து வருகின்றனர். எனவே, பள்ளி மற்றும் டியூஷனுக்குச் செல்லும் மாணவர்கள்; செல்லும் நேரம், வரும் நேரத்தை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். எல்லாவற்றிக்கும் மூல காரணமாக உள்ள மொபைல் போனை மாணவ பருவத்தில் உபயோகிப்பதை பள்ளியில் தடை செய்தாலே இதுபோன்ற பெரிய பிரச்னைகளில் இருந்து மாணவ, மாணவியர்களை பாதுகாக்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement