Ad Code

Responsive Advertisement

பிஎச்.டி., பட்டத்தை திரும்பப் பெறும் அழகப்பா பல்கலை உத்தரவு ரத்து

மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபரின் பிஎச்.டி., பட்டத்தை திரும்பப் பெறும் அழகப்பா பல்கலை உத்தரவை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.


அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தாக்கல் செய்த மனு: நான் எம்.எஸ்.சி.,(கணிதம்), பி.எட்., எம்.எட்., படித்தேன். பின் கணிதம், கல்வியியல் பாடங்கள் இணைந்த பிரிவில் பிஎச்.டி., படித்தேன். அமெரிக்கன் கல்லூரி ஆட்சிக்குழு 2011 அக்.,28 ல் என்னை முதல்வர் மற்றும் செயலாளராக தேர்வு செய்தது. இதற்கு, ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி மதுரை காமராஜ் பல்கலை ஒப்புதல் வழங்கியது.

நான் பிஎச்.டி., படிக்கவில்லை. பல்கலை மானியக்குழு விதிப்படி என்னை முதல்வராக நியமித்தது தவறு என பேராசிரியர் டேவிட் அமிர்தராஜன் ஐகோர்ட்டில் மனு செய்தார். காரைக்குடி அழகப்பா பல்கலை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக்குழு 2012 ஜூலை 19 ல், என் பிஎச்.டி., பட்டத்தை திரும்பப் பெறுவதாகவும், கல்வியியலில் மட்டும் பட்டம் வழங்கப்படும் எனவும் அறிவித்தது. போதிய விளக்கம் அளிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. அறிவிப்பை பரிசீலிக்கக்கோரி, பல்கலைக்கு விண்ணப்பித்தேன்.

ஆவணங்கள்படி முடிவு எடுத்ததாகவும், எந்த விளக்கமும் தேவையில்லை எனவும் கூறி, பிஎச்.டி.,யை திரும்ப ஒப்படைக்க பல்கலை உத்தரவிட்டது. இது இயற்கை நீதிக்கு முரணானது. பல்கலை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.பேராசிரியர் டேவிட் அமிர்தராஜன், தவமணி கிறிஸ்டோபரை முதல்வராக நியமித்ததற்கு, அங்கீகாரம் வழங்கிய, மதுரை காமராஜ் பல்கலை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனு செய்தார்.

நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவு: பிஎச்.டி.,யை திரும்பப் பெறும் அழகப்பா பல்கலை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தவமணி கிறிஸ்டோபருக்கு, தகுதி அடிப்படையில் பல்கலை பதிவாளர் நோட்டீஸ் அளித்து விளக்கம் பெற வேண்டும். பதிவாளர் 4 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள், தேவைப்படின் ஐகோர்ட்டை அணுகி பரிகாரம் தேடலாம்.

டேவிட் அமிர்தராஜன் மனுவைப் பொறுத்தவரை, அழகப்பா பல்கலை தவமணி கிறிஸ்டோபரின் பிஎச்.டி., குறித்து முடிவு செய்து அளிக்கும் சான்றிதழ் பற்றி, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,)யுடன் மதுரை காமராஜ் பல்கலை ஆலோசித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன்படி, முதல்வரின் நியமனம் இருக்கும். அதுவரை, தவமணி கிறிஸ்டோபர் முதல்வராக தொடரலாம். மனுக்கள் பைசல் செய்யப்படுகின்றன என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement