Ad Code

Responsive Advertisement

தமிழ் கட்டாயம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை: பள்ளிக் கல்வி அமைச்சர்

பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடத்தை கட்டாயமாக படிக்க வேண்டுமென்ற சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார். சட்டசபையில் ஒரு உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதைக் குறிப்பிட்டார்.


ஜிவாஹிருல்லா என்ற உறுப்பினர் பேசும்போது, "மொழிவாரியான சிறுபான்மையின மாணவர்களுக்கு, தமிழ் மொழித் தாளை படிப்பதிலிருந்து விலக்கு அளிக்கலாமே?" என்ற வேண்டுகோளை வைத்தார். மேலும், "அந்த மாணவர்கள், functional தமிழை பார்ட் 1 மொழியாகவும், அவர்களின் தாய்மொழியை பார்ட் 2 என்பதாகவும் படிக்கலாம்" என்று ஆலோசனை கூறினார்.

இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வி அமைச்சர், "தமிழ்நாட்டில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மாணவர்களும், தமிழை கட்டாயப் பாடமாக படிக்க வேண்டுமென்று தனியே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இதில் எந்த மாற்றமும் இல்லை.

இதர சிறுபான்மை மொழிகளான உருது, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகியவற்றை, சம்பந்தப்பட்ட மாணவர்கள் விரும்பினால் கற்கும் வகையிலான வாய்ப்புகள் இங்கு உள்ளன" என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர், அமைச்சர் பன்னீர் செல்வம், "ஒவ்வொரு மொழிக்கும், ஒரு தனி தாள் இருக்கும்போது, தமிழின் இடத்தில் சிறுபான்மை மொழியை வைப்பதற்கு ஏன் முயல்கிறீர்கள்?

இந்த மாநிலத்தில் வாழும் சிறுபான்மையின மாணவர்கள், தமிழை படிக்க விரும்பாதது வருத்தம் தருவதாக உள்ளது. அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடுகளெல்லாம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் தமிழைப் படிக்க விரும்பாதது மிகவும் வருத்தமான ஒன்றே. எனவே, அத்தகைய மாணவர்களுக்கு தமிழைப் படிக்குமாறு சொல்லி அறிவுறுத்துங்கள்" என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement