Ad Code

Responsive Advertisement

இட மாறுதல் கலந்தாய்வில் குழப்பம்: 'ஆன்லைன்' குளறுபடியால் ஆசிரியர்கள் ஆவேசம்

திருப்பூரில் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில், நீலகிரி மாவட்டத்தில், பணியிடம் காலி இல்லை என 'ஆன்லைன்' தகவல் வந்ததால், ஆசிரியர்கள் ஆவேசம் அடைந்தனர்.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில், நேற்று, துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 'கவுன்சிலிங்' துவங்கியது. மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் தலைமையில், 26 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கவுன்சிலிங் நடத்தினர். திருப்பூர் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 582 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 195 பேர் பணி இட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தனர். நீலகிரி மாவட்டத்துக்கு இட மாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு, அங்கு பணியிடம் காலி இல்லை என ஆன்-லைனில் வந்துள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த ஆசிரியர்கள், பள்ளி வளாகத்தில் திரண்டு நின்றிருந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆசிரியர்களை சமாதானப்படுத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்துக்கு இட மாறுதல் செய்ய, காலி பணியிடம் இல்லை என்று ஆன்-லைனில் தகவல் வந்தது. சென்னை இயக்குனரகத்தில் இருந்து, இத்தகவல் வருவதால், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. எங்கள் தரப்பில், எந்த தவறும் இல்லை,'' என்றார். ஆசிரியர்கள் மதியம் வரை காத்திருந்தனர். அதன்பின், மீண்டும் முயற்சி செய்தபோது, நீலகிரி மாவட்டத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாக காட்டியது. அதன்பின், அம்மாவட்டத்துக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, 'கவுன்சிலிங்'கில் பங்கேற்றனர்.

ஆசிரியர்கள் திடீர் மறியல்:

' திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை காட்ட மறுக்கின்றனர்; ஆன்லைன் கவுன்சிலிங்கில் குளறுபடி நடக்கிறது,' என, கூறி வெளிமாவட்ட ஆசிரியர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரவு 8.00 மணிக்கு ஜெய்வாபாய் பள்ளி முன் ரோட்டில் அமர்ந்த ஆசிரியர்கள், 'ஆன்லைன் கவுன்சிலிங்கில் குளறுபடி நடக்கிறது; காலிப்பணியிடங்களை காட்ட மறுக்கின்றனர்,' எனக் கூறி கோஷம் எழுப்பினர். திருப்பூர் வடக்கு போலீசார் அவர்களை பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர். முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி கூறுகையில், ''மாநிலம் தழுவிய கவுன்சிலிங்; சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இன்றைய நிலை இது; நாளை (இன்று) காலை கவுன்சிலிங் 9.00 மணிக்கு துவங்கும். அதில் உள்ள பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்,' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement