Ad Code

Responsive Advertisement

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் குழுவில் இணைய விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து முடித்த மாணவர்கள் தகுந்த ஆவணங்களுடன் முன்னாள் மாணவர்கள் குழுவில் இணைவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


இது குறித்து சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படித்து முடித்த பழைய மாணவர்களின் குழு ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன்படி முன்னாள் மாணவர்கள் குழுவில் சேருவதற்கு சென்னை பள்ளிகளில் பயின்றதற்கான தகுந்த சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான படிவத்தை அருகிலுள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி அல்லது மேல்நிலைப்பள்ளிகளில் பெற்று பூர்த்தி செய்து, ஏதேனும் ஒரு மாநகராட்சி உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளியிலோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை ரிப்பன் மாளிகை வளாகத்திலுள்ள கல்வி அலுவலரிடமும் சமர்ப்பிக்கலாம். மேலும் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தின் மூலமாகவும் முன்னாள் மாணவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னை பள்ளிகளில் 9,10,11 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை குழுவில் உறுப்பினர்களாக சேர்த்து, அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதே, முன்னாள் மாணவர் குழுவின் நோக்கமாகும்.

முன்னாள் மாணவர்களுக்கு மேற்படிப்புத் தொடர ஆலோசனை வழங்குதல், தகுந்த வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல், மேற்படிப்பைத் தொடர முடியாத முன்னாள் மாணவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்தல், நல்ல பணி மற்றும் பதவியிலுள்ள முன்னாள் மாணவர்களைக் கொண்டு தற்போது பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டு நிகழ்ச்சிகள் நடத்துதல் ஆகியவை குழுவின் சிறப்பம்சங்களாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement