Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் இந்த நிதியாண்டிலேயே எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இந்த நிதியாண்டிலேயே தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் வெள்ளிக்கிழமை எழுதிய கடித விவரம்:

மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளை படிப்படியாகத் தொடங்க உள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். மத்திய சுகாதார அமைச்சரிடம் இருந்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கு ஏற்ற 3 அல்லது 4 இடங்களைத் தேர்வு செய்யுமாறு கடிதம் வந்துள்ளது.

இந்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, இந்த நிதியாண்டில் எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்க உள்ள முதல் கட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசு கேட்டுள்ளவாறு தேவையான சாலை வசதிகளுடன் கூடிய நிலங்களை காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலும், புதுகோட்டையிலும், தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டியிலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலும், மதுரை மாவட்டம் தோப்பூரிலும் அடையாளம் கண்டுள்ளோம்.

இந்த நிலங்கள் மாநில அரசிடமும், அரசு நிறுவனங்களிடமும் உள்ளன. இந்த 5 இடங்களிலும் நல்ல தண்ணீர் வசதியும், மின்சார வசதியும், ரயில், விமானப் போக்குவரத்து வசதிகளும் உள்ளன.

இதுதொடர்பாக மத்திய அரசுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் வழங்குமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். தரமான மருத்துவக் கல்வி வழங்குவதற்கும், ஏழைகள், நடுத்தர மக்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்குவதற்கும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தரத்தில் ஒரு மருத்துவமனை அமைவதை உறுதிசெய்ய ஆர்வமாக உள்ளேன்.

இதுபோன்ற திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், இந்த நிதியாண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement